தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமெனக் கோரி தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தலித் கிறிஸ்தவ அமைப்பினர் பேரணி மற்றும் கருப்பு நாள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் கருப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.agust

அப்போது, தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.      விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே தலித் கிறிஸ்தவர்களும், தலித் இஸ்லாமியர்களும் இணைந்து கருப்பு நாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும், ஓய்வு பெற்ற நீதிபதி ரங்கராஜ் மிஸ்ரா அறிவுறுத்தலின்படியும், தலித் இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான தலித் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இந்திய தலித் கிறிஸ்தவர் நல இயக்க மாநிலத் தலைவர் ராம்நாத், போராட்டத்திற்கு தலைமை வகித்தார். இந்தியாவில் வாழும் 3 கோடி இந்திய தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தவராக அரசு அறிவிக்க வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

Comments
Loading...