Designed by Iniyas LTD
தலித் மக்கள் மூலம் பாஜகாவை வலுப்பெறச் செய்ய முயற்சி
தமிழ்நாட்டில் தலித் மக்களுடன் நட்புறவு வைத்துக்கொள்வதன் மூலம் பா.ஜனதாவை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிதம்பரம் அருகே உள்ள வடக்கு தில்லைநாயகபுரம் கிராமத்திற்கு வந்தார். அந்த ஊரில் உள்ள தலித் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அங்கு வசித்து வரும் கட்சியின் மாவட்ட விவசாய அணி பொதுச்செயலாளர் தமிழ்வாணன் என்பவரின் வீட்டிற்கு சென்றார். அங்கு குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்துப்போட்டியிட்டால் கூட கணிசமான இடங்களை பிடிக்க முடியும். இது தொடர்பாக எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் 24, 25-ந்தேதிகளில் பழனியில் நடக்கிறது. 
இதில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா போட்டியிடுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி தேர்தல் நேரடியாக இருந்தால் நல்லது. ஆனால் அதை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதனால் மாநகராட்சித் தேர்தலில் மாமன்ற உறுப்பினர்களை ஆளுங்கட்சியினர் விலைபேசிவிடுவார்கள்.
கடலூர் மாவட்டத்தில் பாதாளச் சாக்கடைத்திட்டம் மிகவும் மோசமாக உள்ளது. யாருக்கும் பிரச்சனை இல்லாமல் அத்திட்டத்தை விரைவாக முடிக்கவேண்டும். திண்டிவனத்தில் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்கனூர் பள்ளி பராமரிப்பின்றி ஆடு, மாடுகளை கட்டிப்போட்டுள்ளனர். இதை மாவட்ட நிர்வாகம் சரிசெய்ய வேண்டும்.
தமிழக அரசு 500 மதுபான கடைகளை மூடியதை வரவேற்கிறோம். இதுபோன்று சில ஊர்களில் பள்ளி, கல்லூரி, கோவில் போன்ற முக்கிய இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைகள் மூடப்பட்ட ஊர்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதை தடுப்பு மையம் அமைக்க வேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.