Designed by Iniyas LTD
தலீபான் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல்
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் பழங்குடியின மக்கள் பெருவாரியாக வாழ்கிற வாஜிரிஸ்தான் பகுதி தலீபான் தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது. இங்கு தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்காவின் ஆள் இல்லா விமானங்கள் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவுடன் ‘ஜார்ப் இ ஆஜ்ப்’ என்ற பெயரில் தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஜூன் மாதம் மத்தியில் தொடங்கி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 1,100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வடமேற்கு வாஜிரிஸ்தானில் தன்னாட்சி பகுதியாக உள்ள ஆராக்சாய் பழங்குடியினர் பகுதி தலீபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிற பகுதியாக திகழ்ந்து வந்தது.
ஷிரின் தாரா என்ற இடத்தில் தலீபான் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் நேற்று ராணுவம் ஈடுபட்டது. அப்போது தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
இரு தரப்பினரும் கடும் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். இந்தச் சண்டை பல மணி நேரம் நீடித்தது. முடிவில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.