தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திமுக வையும் முறியடிக்க வேண்டும்? பன்னீர் உறுதி

1100_16493_08205-2-450x287முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், இன்று, கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சியின் மற்ற நிர்வாகிகள் கூடி, ஏப்., 12ல் நடக்கவிருக்கும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: எதிர்பார்த்தது போலவே, தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. அதை மனதில் வைத்துத்தான், பிப். 24ல், ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை, ஆர்.கே.நகரில் மிகச் சிறப்பாக கொண்டாடினோம்.

அ.தி.மு.க.,வின் பெரும்பாலான தொண்டர்கள் நம்மிடம்தான் உள்ளனர் என்பது, அப்போதே நிரூபணம் ஆகி விட்டது, இதனால் ஒரு நம்மையும்; ஒரு தீமையும் அமைந்து விட்டது.

நன்மை – மக்களும், தொண்டர்களும் நம் பக்கம் இருப்பது. தீமை – இந்த உண்மைத் தெரிந்ததும், அவர்கள் சுதாரித்து, கட்சியினரையும், பொதுமக்களையும் அவர்கள் பக்கம் திருப்ப முயற்சிப்பது. பிப்., 24ல் நடந்த நம் நிகழ்ச்சிக்குப் பின், தொகுதிக்குள் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரையும், தங்கள் பக்கம் கொண்டு செல்ல, லட்சங்களை அலட்சியமாக ஒவ்வொருவரிடமும் வழங்கி, பொதுமக்களை, சசிகலா பக்கம் திருப்பக் கேட்டுக் கொண்டுள்ளனர். பணம் வாங்கிச் சென்ற யாராலும், அதை செய்ய முடியவில்லை.

அதனால், நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. 32 அமைச்சர்களையும், தொகுதியில் பல தெருக்களிலும் களம் இறக்கி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, மக்களை விலைக்கு வாங்க திட்டம் போடுவர். எப்படியாவது, இந்த தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதால், எல்லாவிதமான தகிடுதித்தங்களையும் அவர்கள் நிறைவேற்றுவர்.

அவற்றையெல்லாம் நாம் முறியடித்தாக வேண்டும். கூடவே, தி.மு.க.,வையும் சேர்த்து முறியடித்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. தீபா குறித்து, நம் தரப்பினர் யாரும் கவலைப்பட வேண்டாம்; அது குறித்து, யாரும் எதுவும் பேசவும் வேண்டாம்.

ஒருவேளை, அவர் கூறியிருப்பது போல களத்துக்கு வந்தாலும், அவரை, ஒரு இடத்திலும் விமர்சிக்க வேண்டாம். முடிந்த வரையில், அவரை இணைத்துக் கொண்டே தேர்தலை சந்திக்க முயலலாம். முடியாத பட்சத்தில், எதிர்த்து போட்டியிடலாம்.

நம்முடைய ஒரே இலக்கு, இந்தத் தேர்தலோடு, சசிகலா தரப்பை, அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான். அதை நோக்கி, இப்பவே, தொண்டர்களை, தேர்தல் வேலைக்கு முடுக்கி விடுங்கள்.

கட்சியின் பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று, தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டால், இந்த தேர்தலுக்கு, யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது. அடுத்த தேர்தலுக்குள், மொத்த கட்சியும் நம் அதிகார வரம்புக்குள் வந்துவிடும்.

அப்போது, இரட்டை இலை சின்னமும், நமக்கே வந்துவிடும். அதனால், இரட்டை இலை சின்னமும் நம்மிடம் இல்லை என்பதை மனதில் வைத்து, நாம் தேர்தல் பணி செய்ய தயாராக வேண்டும்.

தேர்தல் கமிஷன் மூலம், இரட்டை இலை சின்னத்தைப் பெற வாய்ப்பிருக்கிறதா என்று, சட்ட வல்லுநர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். அதையே, நம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.

தமிழகம் முழுவதிலும் இருந்து, கட்சி நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டு, ஆர்.கே.நகரில் தேர்தல் பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும். ஜெயலலிதா இருந்தால், எப்படி தேர்தலை எதிர்கொள்வோமோ, அதே மாதிரியே, இப்போதும், ஆர்.கே.நகரில் தேர்தலை எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Comments
Loading...