Designed by Iniyas LTD
தியாக தீபம் திலீபன் சென்று 29 ஆண்டுகள் கடந்துவிட்டது..?
தமிழீழத்தில் யாழ்ப்பாணம் பகுதியில் ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்த திலீபன் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு ஈழத் தமிழர்கள் ஆயுத போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் உண்ணாவிரதத்தின் பனிரெண்டாம் நாளான செப்டம்பர் 26 1987 ல் ஈகைசாவடைந்தார்.
திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள்..
1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் தாயகத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
முதல் நாள்..
ஈழ மக்கள் கூடி நின்றிருந்தார்கள். அவர்களது உள்ளம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. திலீபன், உண்ணாவிரத மேடைக்குச் சென்றார்.மேடை ஏறும் முன் ஒரு வயதான அம்மா திலீபனுக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசி விடுகிறார்.சரியாக 9.45க்கு திலீபன் மேடையில் அமர்ந்தார் . உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்கிற விளக்க உரை கொடுக்கப்பட்டது.வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபனுக்கு சே குவேரா , பிடல் காஸ்ட்ரோ,யாசர் அராபத் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு வழங்கப் பட்டது. தொடர்ந்து கவிதைகள் , உண்ணாவிரத விளக்க உரைகள் அரங்கேறின. இரவு 11 மணிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வந்து திலீபனை சந்தித்தார் . அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டு அதிகாலை 1.30க்கு உறங்கினார்.
கையிட்டு மறியல் செய்தனர்.அனைத்துமே அமைதிவழிப் போராட்டம். மேடையில் பேசமுடியாத மக்கள் எல்லாம் எழுத்தின் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தார்கள். இதற்காக ஒரு பத்து பேர் கை வலிக்க வலிக்க எழுதிக் கொண்டிருந்தார்கள்.எழுதிய கருத்துக்கள் எல்லாம் அப்போதைய பாரத பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பப்பட்டது.
ஒன்பதாவது நாள்..
திலீபனின் உடலில் மெல்லிய உதறல் வர ஆரம்பித்திருந்தது . உதடுகள் பாளம் பாளமாக வெடித்து இருந்தன.காலையிலேயே 5000 மக்கள் வந்திருந்தார்கள்.ஆனால் திலீபன் கண்ணைத் திறக்கவில்லை.இந்தியப் படை தென் பிராந்தியத் தளபதி திபேந்தர் சிங் இலங்கை வந்து பிரபாகரனைச் சந்தித்தார் .ஒரு மணி நேர பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. பகல் ஒரு மணிக்கு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.இதில் இந்தியத் தூதுவர் ஜெ.என் .திக்சித், திபேந்தர் சிங் ,இந்திய தூதரகப் பாதுகாப்பு அதிகாரி குப்தா ஆகியோர் இந்தியாவின் சார்பிலும் விடுதலை புலிகளின் சார்பில் அவ்வியகத்தின் தலைவர் பிரபாகரன் ,தளபதி மாத்தையா,அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம்,வழக்கறிஞர் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பத்தாவது நாள்..
திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது. மனிதனுக்கு சராசரியாக இருக்க வேண்டிய நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 72 . திலீபனின் நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 52.சாதாரண ரத்த அழுத்த அளவு (120/80) இருக்க வேண்டும். ஆனால் திலீபனின் நாடித் துடிப்பு (80/50). தனது சக்தி முழுவதையும் திரட்டி திலீபன் இரண்டு வரி பேசினார் “நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன் ” . மக்களின் போராட்டம் அதிகரித்தது பல்வேறு ஊர்களில் மக்கள் அடையாள உண்ணாவிரதத்தில் அமர்ந்தார்கள். 6000 மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர்.
பதினோராவது நாள்..
உயிருடன் இருக்கிறாரா இறந்து விட்டாரா என்றே தெரியாத அளவுக்கு இருந்தார் திலீபன். அனிச்சையாக அவரது உடல் அசைவதன் மூலமே அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்தது.அவர் செமி கோமா நிலையில் இருந்தார். பெரிய கட்டில் ஒன்றை கொண்டுவந்து அதில் அவரை மாற்றினார்கள்.அப்போது தான் அவர் படுக்கையிலேயே சிறுநீர் கழித்திருந்ததை பார்த்தார்கள். திலீபனுக்கு வேறு உடை மாற்றினார்கள். திலீபனுக்கு மிகவும் பிடித்த “ஓ மரணித்த வீரனே! – உன் ஆயுதங்களை எனக்குத் தா. உன் சீருடைகளை எனக்குத் தா.. ” என்கிற பாடலைப் பாடினார்கள். அந்த பாடலைக் கேட்டுக் கொண்டே கோமாவில் விழுந்தார்.
அந்த இரவு அழுதுகொண்டே விடிந்தது.தொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் சரியாக காலை 10.58 க்கு வீர மரணம் அடைந்தான்.அதிகாரத்துவம் அவனை சாகவிட்டுவிட்டது. ஆனால் அதுவே பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. மீண்டும் ஈழ மக்களை ஆயுதம் தங்கிய போராட்டத்திற்கு வழி வகுத்தது.