Designed by Iniyas LTD
திருகேதீஸ்வரத்தில் பதட்டம்: ஆலயத்திற்குச் செல்லும் வரவேற்பு வளைவு உடைப்பு
திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வீதியில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவின் புனரமைப்பு வேலைகளுக்குச் சிலர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடையூறு விளைவித்ததால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாளைய தினம் மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்தில் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறன.
இந்நிலையிலேயே குறித்த புனரமைப்புப் பணிகளுக்கு அப்பிரதேசத்தினைச் சேர்ந்த சிலரால் இடையுறு விளைவிக்கப்பட்டதையடுத்து அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டபோதும் இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வளைவு அமைக்கப்பட்டுள்ள பாதை தொடர்பான பிணக்கு ஒன்று வழக்கில் உள்ளதாகத் தெரிவித்து அப்பிரதேசத்தினைச் சேர்ந்த வேற்று மதத்தினைச் சேர்ந்தவர்களால் குறித்த பணிகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக எனது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இச்சம்பவம் தொடர்பாக திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நிர்வாகி கருத்துத் தெரிவித்தபோது, இந்த பாதைக்கு வழக்குகள் எதுவும் இல்லை. பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வளைவு துருப்பிடித்ததால் புதிதாக அமைக்கும் பணியில் ஈடுபட்டபோதே சிலர் குழப்பம் விளைவித்துள்ளனர்.
மேலும், இந்த வீதியில் வளைவு அமைப்பதற்கான வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதிக் கடிதம் உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு அளிக்கப்பட்டால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என மன்னார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


