தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருச்சி உட்பட 5 மாவட்டங்களில் கடும் வரட்சி!

201701050953279224_trichy-including-severe-drought-in-5-districts-50-percent_secvpfதிருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் வரட்சியால் சம்பா சாகுபடி 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் சம்பா சாகுபடி தொடங்கும். இந்த 5 மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படும்.

திருச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 43 ஆயிரத்து 750 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி நடைபெறும். காவிரி தண்ணீர், கிணறு, ஏரி தண்ணீரை பயன்படுத்தி இந்த சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டு கடும் வறட்சியால் சம்பா நெல் சாகுபடி 58 ஆயிரத்து 142 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக பெய்யும் பருவ மழை 35 சதவீதம் மட்டுமே பெய்துள்ளதாலும், காவிரில் போதிய தண்ணீர் இல்லாமல் போனதாலும் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்தது. கிணற்று பாசனமும் குறைந்ததால் பயிர் உற்பத்தி 50 சதவீதமாக குறைந்து விட்டதாக விவசாயிகள் கூறினர்.

இதேபோல் திருச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சோளம் 78,500 ஏக்கரில் பயிர் செய்யப்படும். கடும் வறட்சியால் இந்த ஆண்டு 47,148 ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. இதே போல் மக்காச்சோளம் 58 ஆயிரத்து 450 ஏக்கருக்கு பதில் 28 ஆயிரத்து 365 ஏக்கரிலும், நிலக்கடலை 44 ஆயிரத்து 400 ஏக்கருக்கு பதில் 19 ஆயிரத்து 85 ஏக்கரிலும், பருத்தி 47 ஆயிரத்து 500 ஏக்கருக்கு பதில் 25 ஆயிரத்து 138 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டது.

இதேபோல் தோட்டக்கலை பயிர்களான வாழை, கரும்பு, காய்கறிகள் ஆகியவை சாகுபடியும் வறட்சியால் பாதியாக குறைந்துள்ளது.

இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் வறட்சியால் மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி, புள்ளம்பாடி, அந்தநல்லூர், மணப்பாறை, தொட்டியம், திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வாழை, கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களும் வறட்சியால் கருகியதால் பல நூறு கோடி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர்கள் கருகி விவசாய நிலங்கள் வெடித்து பாளம் பாளமாக காட்சி அளிக்கிறது. விவசாயிகள் வேதனையில் துடிக்கிறார்கள். எனவே அரசு விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், வாழை பயிருக்கு ரூ.1 லட்சம், கரும்புக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

ரேசன் கார்டு உள்ள ஒவ்வொரு விவசாய தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே விவசாயத்தை எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நேற்று தமிழக வருவாய்த்துறை ஆணையர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அதிகாரிகள் வீடியோ கான்பரன் சிங் மூலம் திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி, வேளாண் இணை இயக்குனர் உஸ்மான் அலி மற்றும் அதிகாரிகளுடன் திருச்சி மாவட்ட வறட்சி நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இன்று முதல் திருச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமங்களிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள், சேத மதிப்பு குறித்து கணக் கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர் கள், வேளாண் உதவி அலுவலர்கள், வட்டார அலுவலர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த குழு வறட்சி நிலவரத்தை கணக்கிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர். அதன்பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு திருச்சி மாவட்ட வறட்சி பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்கப்படும்.

இதேபோல் கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் வறட்சி பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

Comments
Loading...