Designed by Iniyas LTD
திருப்பதியில் கைதான 32 தமிழர்கள் சார்பில் வாதாட இரு வழக்கறிஞர்கள்!
திருப்பதியில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களின் சார்பில் கோர்ட்டில் ஆஜராக வக்கீல்கள் இருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. வக்கீல்கள் இருவரும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள திருப்பதிக்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.
சுட்டு கொலை
செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக கூறி ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த ஆண்டு 20 தமிழர்களை ஆந்திர மாநில போலீசார் சுட்டுக் கொன்றனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு பின்னர், தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் தமிழ்நாட்டை சேர்ந்த பலரை ஆந்திர மாநில போலீசார், செம்மரக் கடத்தல் கும்பல் என்று கூறி தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 288 தமிழர்கள் மீதான வழக்கு திருப்பதி நீதிமன்றத்தில் நடந்தது. இவர்களுக்காக கோர்ட்டில் ஆஜராக வக்கீல்கள் எம்.முகமது ரியாஸ், வி.அருள் ஆகியோரை தமிழக அரசு நியமித்தது.
இவர்கள் இருவரும் திருப்பதி கோர்ட்டில் 288 பேர் சார்பில் ஆஜராகி, வாதம் செய்து, அந்த வழக்கில் இருந்து அனைவருக்கும் விடுதலை வாங்கிக் கொடுத்தனர்.
வக்கீல்கள் நியமனம்
இந்த நிலையில், கடந்த 4-ந் தேதி சென்னையில் இருந்து திருப்பதிக்கு கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்ற 32 தமிழர்களை ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் வைத்து ஆந்திர மாநில போலீசார் கைது செய்தனர்.
32 பேரும் செம்மரங்களை வெட்டுவதற்காக திருப்பதி வந்ததாக குற்றம் சுமத்தி வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த 32 பேருக்கு சட்ட உதவிகளை செய்யவும், அவர்களுக்காக கோர்ட்டில் ஆஜராகவும் வக்கீல்கள் எம்.முகமது ரியாஸ், வி.அருள் ஆகியோரை தமிழக அரசு மீண்டும் நியமித்துள்ளது. இவர்கள் இருவரும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள நேற்று திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர்.