Designed by Iniyas LTD
தீவிரவாதிகள் மறைவிடங்களை குறிவைத்து போர் விமானங்கள் குண்டு வீச்சு
வடக்கு வசிரிஸ்தானில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீசியதில் 23 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின், வடக்கு வசிரிஸ்தானில் உள்ள ஷாவால் பகுதியில் தீவிரவாதிகள் மறைவிடங்களை குறிவைத்து ராணுவம், போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசியது.
ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் 23 தீவிரவாதிகள் பலியாகினர் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் பதுங்குமிடமும் அழிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 27ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் வடமேற்கு பகுதிகளில் சுமார் 55 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது.
கடந்த வெள்ளிக் கிழமை அன்று ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய ஒராக்ஷாய் மற்றும் கைபர் பழங்குடி மாவட்டங்களில் ராணுவம் தீவிரவாதிகள் மறைவிடங்களில் சோதனை மேற்கொண்டது.
அப்போது அங்கு தீவிரவாதிகளின் கூட்டம் நடைபெற்றது. அப்போது இருதரப்பினர் இடையே கடும் போர் நடைபெற்றது. இந்த சண்டையில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் ராணுவம் அதிரடி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகினர்.
சமீபத்தில் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளிக்கூடம் மீது தலிபான் தீவிரவாதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 132 குழந்தைகள் உள்பட 150 பேர் பலியாகினர்.
இதனையடுத்து ராணுவம் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கராச்சி விமான நிலையத்தில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியதை அடுத்து தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் நடத்திய ஆப்ரேஷனில் இதுவரையில் சுமார் 1700 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.