தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

துணை சபாநாயகர் பதவியையும் இழக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி

பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் பதவியை அடுத்து துணை சபாநாயகர் பதவியையும் இழக்கும் நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. மத்தியில் பா.ஜனதா தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் பதவி இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது.

இது தொடர்பாக ஆளும் பா.ஜனதா கட்சி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் 44 எம்.பி.க்களை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சித்தலைவர் பதவியை பெறுவதற்கு கடுமையாக போராடி வருகிறது. இந்த பதவி காங்கிரஸ் கட்சிக்கே வழங்க வேண்டும் என கூறி வரும் சோனியா காந்தி, இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் ஒன்றையும் நேற்று முன்தினம் நடத்தினார்.Manmohan-Sonia Gandhi3

இந்தநிலையில் பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, துணைத்தலைவர் அம்ரிந்தர் சிங் மற்றும் கொறடா ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் நேற்று சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்தித்து, இது தொடர்பாக முறைப்படி கோரிக்கை விடுத்தனர். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சேர்ந்த 60 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றையும் அவர்கள் சபாநாயகரிடம் வழங்கினர். எதிர்க்கட்சி தலைவர் பதவி விவகாரத்தில் தொடர்ந்து இழுபறியே நீடிக்கிறது.

இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகர் பதவியையும் இழக்கும் நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. மக்களவை துணை சபாநாயக பதவியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க ஆளும் கட்சிக்கு விருப்பம் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 1991ம் ஆண்டில் இருந்து எதிர்க்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி கொடுக்கப்பட்டு வரும் வழக்கம் முடிவுக்கும் வரலாம் என்று கூறப்படுகிறது. “துணை சபாநாயகரை தேர்வு செய்தவது குறித்தான நடவடிக்கைகள் முறையாக தொடங்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் பெரிய எதிர்க்கட்சிக்கு தான் துணை சபாநாயகர் பதவியை கொடுக்க வேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை. தனிப்பட்ட கட்சியின் பலத்தை கொண்டு இந்த பதவியை கொடுக்க வழிமுறைகள் இல்லை. இவ்விவகாரம் தொடர்பான முடிவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று ஆளும் கட்சி வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments
Loading...