Designed by Iniyas LTD
துபாயில் பலத்த மழை
துபாயில் பெய்த பலத்த மழையினால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஓமனில் மழைக்கு 5 பேர் பலியானார்கள். 
அமீரகத்தில் மழை
அபுதாபி, துபாய், சார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராசல் கைமா, புஜேரா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் ஏராளமான கார்கள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் பல்வேறு பகுதிகளில் சாலைகளே தெரியாத அளவுக்கு மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.
மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அமீரகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. மேலும் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அபுதாபி, துபாய், சார்ஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பெரிய மோட்டார்கள் மூலம் மழைநீரை உறிஞ்சி அப்புறப்படுத்தும் பணியில் ஏராளமாக பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மெட்ரோ ரெயில் நிலையத்தில் வெள்ளம்
கனமழையால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாலைகளில் விழுந்து கிடந்தன. இதையும் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். கனமழையால் அபுதாபி, துபாய் உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது. நேற்று வழக்கம்போல் விமானங்கள் இயக்கப்பட்டன. கனமழையால் துபாயில் தானுபே மெட்ரோ ரெயில் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் நேற்று அங்கு மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ரெயில் நிலையத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என்று தெரிகிறது.
ஓமனில் கனமழை
மஸ்கட், சோகர் உள்ளிட்ட ஓமன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் நேற்றும் ஓமனில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் ஆறாக ஓடியது. வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்றன. சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர். கனமழையால் ஓமனில் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
5 பேர் பலி ஓமன் நாட்டில் 5 பேர் பலியானதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. முதைபி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலியானார். மற்றொருவர் அந்த பகுதியில் செல்லும் கால்வாயில் மூழ்கி இறந்துபோனார். மேலும் 3 பேர் மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டு பலியானார்கள். வெள்ளத்தில் சிக்கி தவித்த 40 பேர் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டனர்.
விமான சேவை பாதிப்பு இல்லை
கனமழையால் பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) வார விடுமுறை ஆகும். மழை காரணமாக பல்வேறு பகுதியிலும் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. ஓமனில் பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளன. விமான போக்குவரத்து சேவை மழையினால் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் சாலையில் சிக்னல் வேலைசெய்யவில்லை. அந்த இடங்களில் ஓமன் நாட்டைச்சேர்ந்த இளைஞர்கள் பலர் தன்னார்வத்துடன் ஈடுபட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.