Designed by Iniyas LTD
துருக்கியில் சதிப்புரட்சியுடன் தொடர்புடைய 40,000 பேர் சிறையில் அடைப்பு!
கடந்த மாதம் தோல்வியடைந்த இராணுவ சதிப்புரட்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய குற்றச்சாட்டின் பேரில், 40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக துருக்கிய பிரதமர் பினாலி யில்டிரிம் தெரிவித்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) துருக்கிய அரச தொலைக்காட்சியில் நேரடியாக உரையாற்றியபோதே, பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் ஆட்சிக் கவிழ்ப்பை நோக்காகக் கொண்டு நடத்தப்பட்ட சதிப்புரட்சியுடன் தொடர்புடைய 20,355 பேர் முறையாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இராணுவம், பொலிஸ், சிவில் சேவை மற்றும் நீதித்துறையில் கடமையாற்றிய 79,900 பேர் இதுவரை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், சதிப் புரட்சிக்கு முக்கிய சூத்திரதாரியாக செயற்பட்ட மதகுரு குலனுடன் தொடர்புடைய சுமார் 4,262 நிறுவனங்கள் மற்றும் கல்வியகங்கள் மூடப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த மாதம் 15 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சியின் போதான மோதல்களில் குறைந்தது 246 பேர் கொல்லப்பட்டதுடன், 2,100 இற்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.