தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேயிலை தோட்ட மண்சரிவு மீட்பு பணி 9 நாட்களாக தொடருகின்றது

இலங்கையில் பதுளை மாவட்டத்தில் மீரியாபெத்தை தேயிலைத் தோட்டம் மண்சரிவில் புதையுண்டு 9 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை 9 சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.

மண்சரிவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களும், மண்சரிவு அபாயம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுமாக சுமார் 1500க்கும் அதிகமானோர் அங்குள்ள பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபட்டுவருகின்ற தொண்டர்கள் கூறுகின்றனர்.Sri Lanka Mudslide

பள்ளிக்கூடங்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டிய தேவை இருப்பதால், அங்கு தங்கியுள்ள மக்கள் விரைவில் அருகிலுள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் அதிகாரிகளை மேற்கோள்காட்டி உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

மண்ணில் புதையுண்டவர்களின் சடலங்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் நடந்துவருவதாகவும், அந்தப் பிரதேசத்தின் சூழல் மற்றும் மண்சரிவின் அளவு காரணமாக மீட்புப் பணிகள் மந்த கதியிலேயே நடந்துவருவதாகவும், பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் உள்ளூர் பாடசாலைகளில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, கண்டியிலுள்ள இந்திய உதவித் தூதரகத்தின் உதவித் தூதுவர் ஏ. நடராஜன் கொஸ்லாந்தை பகுதிக்கு இன்று சென்று, அங்குள்ள மக்களின் நிலைமைகள் குறித்து கேட்டறிந்துகொண்டுள்ளார். இந்திய அரசாங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.

Comments
Loading...