Designed by Iniyas LTD
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: தமிழக அரசு அடக்குமுறைகளை கைவிட வேண்டும் – இரா.முத்தரசன் வலியுறுத்தல்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க அமைப்புகள் 7 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராடி வருகின்றனர். அரசு, தொழிற்சங்க தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெறாத நிலையில், இன்று முதல் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். முதல்-அமைச்சர் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு தொழிற்சங்க தலைவர்களுடன் பேசி, சுமுக தீர்வு காண முன்வர வேண்டும்.
மாறாக அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும், அச்சுறுத்தப்படுவதும் கடும் கண்டனத்துக்குரியது. தொழிலாளர் விரோத போக்கை அரசு மேற்கொண்டு அவப்பெயருக்கு ஆளாக வேண்டாம் என எச்சரிக்கின்றோம்.
எத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளும் ஒரு போதும் வெற்றி பெற்றதில்லை. ஓய்வு பெற்ற தொழிலாளர்களை பயன்படுத்தி பேருந்துகளை இயக்க அரசு முயற்சிப்பது தொழிலாளர்களிடையே மோதலை உருவாக்கும் மிக மோசமான போக்காகும். இப்பிரச்சினையில் முதல்-அமைச்சர் உடன் தலையிட்டு தீர்வுகாண முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.