Designed by Iniyas LTD
த.மா.கா. மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
சென்னையில் த.மா.கா. மாணவர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜி.கே.வாசன், பள்ளி முதல் கல்லூரி வரை படிப்பை இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறினார். சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை த.மா.கா. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும். கல்வி கடன்களை வசூல் செய்ய தனியார் நிறுவனத்துக்கு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. மாணவர் அணி தலைவர் சுனில்ராஜா தலைமை தாங்கினார்.
இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:– கல்வி வளர்ச்சிதான் தேசத்தின் அடையாளம். நாட்டின் வாழ்வும், வளமும் மாணவர்கள் கையில்தான் உள்ளது. மாணவர்கள் நலன் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும். பள்ளி முதல் கல்லூரி வரை படிப்பை இலவசமாக வழங்க வேண்டும். தனியார் கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வி கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மாணவர்களின் கடன்களை மத்திய, மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.
மாணவர்களின் கல்வி கடனை வசூலிக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்ததை ரத்து செய்ய வேண்டும். கல்வி கடனை வாராக்கடனாக அறிவித்து மாணவர்களின் பெயரை சிபில் பட்டியலில் சேர்ப்பது கண்டிக்கத்தக்கது. கல்வி கடன் வாங்கிய மாணவர்கள் திருப்பி செலுத்தாத நிலையில் அவர்கள் வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கும்போது அதை நிராகரிப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா. மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன், துணைத்தலைவர் கோவை தங்கம், பொதுச்செயலாளர் விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர் பிஜூசாக்கோ, மாணவர் அணி துணைத்தலைவர் அஸ்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.