தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நளினி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு4 வாரங்கள் அவகாசம்

சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு, மத்திய அரசின் அனுமதி பெறவேண்டும் என்ற குற்றவியல் சட்டப்பிரிவை நீக்கக்கோரி, நளினி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலிலும், நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.nalini

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நளினி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: மனுதாரர் கடந்த 23 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். 2001ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 2200 ஆயுள் தண்டனை கைதிகள் தமிழக அரசால் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் மனுதாரர் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்த காரணத்தால், அவர் தமிழக அரசால் விடுதலை செய்யப்படவில்லை.

கடந்த பிப்ரவரி 19ந் தேதி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற 6 ஆயுள் தண்டனை கைதிகளுடன் மனுதாரரையும் விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசு வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை அவர்களின் நன்னடத்தையின் காரணமாக விடுதலை செய்ய முடிகிறது.

ஆனால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 435(1)(ஏ) பிரிவின் படி சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசு விடுதலை செய்ய முடிவது இல்லை. இந்த குறிப்பிட்ட பிரிவு ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை தடுக்கிறது. சி.பி.ஐ. வழக்குகளில் விசாரிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் மாநில போலீசாரால் விசாரிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற கைதிகள் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. எனவே குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 435(1)(ஏ) பிரிவை நீக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு கடந்த ஜூலை 25ந் தேதி விசாரணைக்கு வந்த போது இதுகுறித்து 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த மனுவின் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா மற்றும் நீதிபதிகள் குரியன் ஜோசப், ரொகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நளினி சார்பில் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் பினோ பென்சிகர் ஆகியோர் ஆஜரானார்கள். மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் மோகனா, தங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மத்திய அரசு 4 வாரங்களுக்குள் நளினியின் மனு மீது பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

Comments
Loading...