Designed by Iniyas LTD
நாட்டின் அனைத்து அரசுகளும் உளவுத்தகவல்களை பகிர வேண்டும்!
உள்நாட்டு பாதுகாப்புக்காக உளவுத் தகவல்களை மத்திய அரசுடன் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்தவேண்டும் முதல்-மந்திரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
டெல்லியில் மாநிலங்கள் கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகும், பிரதமராக மோடி பதவியேற்ற 2 ஆண்டுகளுக்கு பின்பும் இந்த கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அனைத்து மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள், 17 மத்திய மந்திரிகளையும் உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சிலின் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
மத்திய அரசும், மாநில அரசுகளும் மிகவும் நெருங்கி ஒத்துழைத்து தோளோடு தோளாக கைகோர்த்து நடந்து சென்றால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியம் ஆகும்.
எனது அரசு கூட்டாட்சி முறை தத்துவத்தில் நம்பிக்கை கொண்டு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சிறந்த எதிர்காலத்தை நம்மால் ஏற்படுத்தி தர இயலும்.
இதனால்தான் 2014-15-ம் ஆண்டை விட 2015-16-ம் ஆண்டில் மாநில அரசுகளுக்கு 21 சதவீத கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து இருக்கிறது.
உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள சவால்களை எதிர்த்து போராட தயார் படுத்திக் கொள்வதில் நாம் கவனம் செலுத்தவேண்டும். இதற்கு எப்போதும் மிகுந்த விழிப்புணர்வும், மேம்படுத்தப்பட்ட அவ்வப்போதைய தகவல்களும் அவசியம் ஆகும்.
மத்திய அரசும், மாநில அரசுகளும் இதுதொடர்பான உளவு தகவல்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவது கடினம்.
எனவே இதில் மத்திய அரசும், மாநில அரசுகளும் நெருங்கி ஒத்துழைத்து செயல்படவேண்டும். இதனால் மத்திய-மாநில அரசுகளின் நட்புறவு மேம்படுவதுடன் நாட்டு மக்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும். இவ்வாறு மோடி பேசினார்.
இந்த கூட்டத்தில் உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தாமதமாக வந்து பங்கேற்றார். காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை நீடிப்பதால் மாநில நிலைமையை கருத்தில் கொண்டு முதல்-மந்திரி மெகபூபா முக்தி இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.