Designed by Iniyas LTD
நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யவும் தயார்!
எத்தகைய சவால்கள் வந்தாலும் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவும் உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கவும் பின்நிற்கமாட்டேன். மாற்றத்தை ஏற்படுத்த உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றேன். யுத்தத்தின்பின்னர் விடப்பட்ட தவறுகளை சரிசெய்யவும் நல்லிணக்கத்தைப் பலப்படுத்தவும். வடக்கு, தெற்கு மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமாதானத்தை நிரந்தரமாக்கவும் இனங்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையைஉருவாக்கவும் நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் யுத்தம் இடம்பெற்றதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியமாகும். அதற்கான வேலைத்திட்டங்களை எனது அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டுமண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டில் யுத்தம் முடிக்கப்பட்டது. ஆனால் யுத்தத்தின் பின்னரான மக்களின் தேவைகள், மனிதாபிமான செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கவில்லை. இதன் காரணமாகவே மனித உரிமை ஆணைக்குழுவில் எமது நாடு தொடர்பில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
எமது ஆட்சியில் யுத்தத்தின் பின்னரான மக்களின் தேவைகள் சேவைகள் நிறைவேற்றப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அத்துடன் யுத்தம் ஏன் ஏற்பட்டது ? அதற்கான காரணங்கள் என்னவென்பதை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
எமது நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத விதத்தில் அனைத்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். அனைத்து இனங்கள், மதங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டில் நிலையான உண்மையான சமாதானம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதில் நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.
வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் நாடு முழுவதுமுள்ள மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவோம். அடிப்படை வசதிகளை வழங்குவோம். அதேவேளை அடிப்படைவாதிகளின் எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கி மக்கள் தேவைகளை நிறைவேற்றுவோம்.
கடந்த ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி புரட்சியை ஏற்படுத்த உதவிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில்விக்கிரம சிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் அனைத்து தரப்பினர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த ஒருவருட காலத்தில் பல்வேறு அனுபவங்களை நான் சந்தித்தேன், அனுபவித்தேன். அண்மையில் இங்கைக்கு வந்த பாகிஸ்தான் பிரதமர் உட்பட உள்நாட்டில் பலர் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பினர். நீங்கள் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளீர்கள், அதற்கு பின்னர் உங்கள் நிலை என்ன? உங்களுக்கு அரசியல் பலம் இல்லாமல் போய்விடுமா எனக் கேட்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் நான் கொடுக்கும் பதிலை இங்கு கூறுகின்றேன். எனக்கு எந்தவிதமான தனிப்பட்ட அபிலாஷைகளோ அல்லது அரசியல் நிகழ்ச்சி நிரலோ கிடையாது. எனது நிகழ்ச்சி நிரலில் நாடும், மக்களுமே உள்ளனர். எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் நாட்டையும் மக்களையும் கட்டியெழுப்புவதே எனது நிலைப்பாடாகும்.
அதனைவிடுத்து தனிப்பட்ட ஆசாபாசங்கள் என்னிடம் கிடையாது. முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என எனக்கு நாடும் மக்களுமே முக்கியமாகுமு். அவற்றைவிட வேறெதுவும் கிடையாது.
ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஹெலஉறுமய, தேசிய காங்கிரஸ் என ஆதரவு வழங்கிய வர்களுக்கு எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
இந்த ஒரு வருட பூர்த்தி தொடர்பில் பலர் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். எதனையும் செய்யவில்லை என்கின்றார்கள், ஒருசிலர் ஏதாவது செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள், புத்த தர்மத்தை அழிக்கப்போகின்றார், படையினரை பலவீனப்படுத்தப் போகின்றார் இவ்வாறு பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் நாட்டில் பாரிய சமூக ஜனநாயக புரட்சியை மேற்கொண்டுள்ளோம்.
அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி 19 ஆவது திருத்தம் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்துள்ளோம். ஊழல் மோசடிகள், வீண் விரயங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. ஒழுக்கமுள்ள நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதியேதோர் இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அத்திவாரத்தை இட்டுள்ளோம். 40 வருடங்கள் எங்களால் முயற்சி செய்யப்பட்டு முடியாமல் போன சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவையனைத்தும் கண்களுக்கு தெரியாமல் இருக்கலாம், வயிற்றுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் நாட்டு மக்களு ம், கல்விமான்களும் இதனை புரிந்து கொண்டுள்ளார்கள். இதனை வரவேற்கின்றனர். இவற்றின் மூலம் புதிய நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.நாட்டில் மனித நேயத்திற்கு கௌரவத்தை வழங்கியுள்ளோம்.
ஐ.நா ஆணையாளர் நாயகம் பான் கீ மூன் எனது ஒருவருட பூர்த்தியை பாராட்டியுள்ளார். நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இது எமது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
நாட்டின் பிரதான இரண்டு எதிர்க்கட்சிகளும் ஏனைய இதர கட்சிகளும் இணைந்து இன்று இணக்கப்பாட்டு அரசியலுடன் ந ல்லாட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை ஒரு குழுவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. நான் வெ ளிநாடு சென்றபோதேல்லாம் வெ ளிநாட்டுத் தலைவர்கள் இதற்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.
60 – மற்றும் 70 வருடங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்த நட்டின் இரண்டு பிரதான கட்சிகள் இன்று ஒன்றிணைந்து ஆட்சி நடத்துவதை உலகத் தலைவர்கள் வியப்புடன் பாராட்டுகின்றனர். நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்பட இடமளிக்க மாட்டோம். நாட்டின் உயர்வுக்காவும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்துக்காவும் உயர் அர்ப்பணிப்புடன் செயலாற்ற நான் பின்நிற்க மாட்டேன். எந்த சவால்கள் எந்தத் தடைகள் வந்தாலும் நாட்டுக்காவும் மக்களுக்காகவும் தைரியமாக தீர்மானத்தை எடுப்பேன்.
எனது வாழ்க்கையில் உண்மையிலேயே சந்தோஷமடைந்த நாள் என்றால் அது 2014 நவம்பர் மாதம் 21 ஆம் திகதியாகும். நாட்டுக்காகவும் மக்களுக்காவும் எனது பதவிகளை தூக்கியெறிந்து அரசைவிட்டு வெ ளியேறி எனது கடமையை நிறைவேற்றினேன். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான நாளாகும்.
உலகின் மக்கள் நலனுக்காக பாடுபட்ட ஆ பரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர், மகாத்மா காந்தி ஆகியோர் சுட்டுக கொல்லப்பட்டனர். மக்களுக்காக பாடுபட்ட உன்னதத் தலைவர் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகினார்கள். சமூகப்புரட்சியை ஏற்படுத்திய எனது ஸ்தாபகத் தலைவர் பண்டாரநாயக்கவின் உயிரும் துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கப்பட்டது. இவ்வாறு நாட்டுக்காக மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உலகம் வேகமாக அபிவிருத்தி கண்டு வருகின்றது. விண்வெ ளித்துறை, தொழில்நுட்பத்துறை வேகமாக வளர்கின்றன. இதனுடன் இணைந்து நாமும் எமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு நிம்மதியான சமாதானம் வேண்டும்.
எனவே எந்தச் சவால்கள், தடைகள் வந்தாலும் இதற்கான தீர்மானம் எடுப்பதில் நான் பின்நிற்க மாட்டேன். நாட்டில் தேசிய உற்பத்தியை அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து, மக்கள் மீது சுமைகள் சுமத்தாது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வேன் என்றார்.
இந் நிகழ்வில் பிரதமர் ரணில்விக்கிரம சிங்க, இந்தியாவிலிருந்து வருகைதந்த கோபால கிருஷ்ணன் காந்தி, ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபனைநந்தி ஆகியோரும் உரையாற்றினார்கள்.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோன் அமரதுங்க, அர்ஜுண ரணதுங்க , ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியூதீன் உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டதோடு,பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள் உட்பட படைகளின் உயரதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.