Designed by Iniyas LTD
நாட்டு வைத்தியர் உட்பட 3 பேர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே நாட்டுமருந்து உட்கொண்ட நாட்டு வைத்தியர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் அழகப்பபுரம் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முத்துப்பாண்டி என்ற நாட்டு வைத்தியர் வந்துள்ளார். ஊர் மக்களிடம் தன்னை நாட்டுவைத்தியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், மூலிகை மருந்துகளையும் கொடுத்துள்ளார்.
இதனிடையே, சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்க்கு தானாகவே, மருந்து தயாரித்த வைத்தியர் முத்துப்பாண்டி, அதனை தானும் உட்கொண்டதோடு மட்டுமில்லாமல் மற்ற 3 பேருக்கும் அளித்துள்ளார். இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட, வைத்தியர் முத்துப்பாண்டி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதேபோல் முத்துப்பாண்டி தயாரித்து அளித்த நாட்டு மருந்தை உட்கொண்ட பாலசுப்ரமணியன், இருளாண்டி ஆகியோரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சாமிநாதன் என்பவர் பாளையம்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.