தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீதிக்கான போராட்டங்களின் போது வன்முறைகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன் வலியுறுத்தல்

sambanthanதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்

வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூரக் கொலைக்கு காரணமான குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்க இடமளிக்கக் கூடாது.

வித்தியா படுகொலை தொடர்பில் போதிய ஆதாரங்கள் பொலிஸாரின் வசம் உள்ளன. எனவே, அவை வெகு விரைவில் நீரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அதி உச்சத் தண்டனை வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் வித்தியாவின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார்.

மேலும், வித்தியா படுகொலையை கண்டித்தும், நீதிக் கோரியும் வடக்கு கிழக்கு எங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறாக ஆர்ப்பாட்டங்களின் மூலம் மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மக்களின் இந்த உணர்ச்சி வெளிப்பாட்டை நாம் மதிக்கின்றோம்.

ஆனால் கடந்த புதன்கிழமை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள், பாதுகாப்பு தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டமை, நீதிமன்ற கட்டடித்திற்கு சேதம் ஏற்படுத்தியமையும் கண்டிக்கத்தக்கதாகும்.

நீதிக்காக மக்கள் போராடுகின்றமை தவறில்லை. ஆனால் நீதிக்கான தமது போராட்டங்களின் போது வன்முறைகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...