தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீதியரசருக்காகவும் நீதிக்காகவும் கொந்தளிக்கும் தாயக மக்கள்

தாயகத்தில் சிங்கள அரசின் சதியால் ஏற்பட்டுள்ள குழப்பம், தாயக மக்களின் எழுச்சியாக மாறியுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கு எதிராக சிங்கள அரசு சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஊடாக மேற்கொண்ட பதவி கவிழ்ப்பு முயற்சி தோல்வி கண்டுள்ளது. அத்துடன் மாபெரும் மக்கள் எழுச்சி ஒன்றுக்கான சந்தர்பத்தை இந்த சூழ்ச்சியே ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனின் நடவடிக்கைகள் மற்றும் கருத்துக்கள் சிங்கள அரசுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது. இலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்களுக்கு நிகராக வடக்கு முதல்வரின் கருத்துக்களும் நிலைப்பாடுகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. குறிப்பாக தமிழ் மக்களின் உரிமையை வெல்லும் நீதியை வெல்லும் குரலாக நீதியரசரின் குரல் ஓங்கி ஒலிக்கின்றது.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை வடக்கு முதல்வர் நிறைவேற்றியிருந்தார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு உலகின் கவனத்தை ஈட்டியிருந்தது. இலங்கையில் வரலாறு முழுவதும் தமிழ் மக்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள் என்பதையும் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலையின் உச்சம் என்பதையும் ஆதார பூர்வமாகவும் சட்ட பூர்வமாகவும் அத் தீர்மானம் எடுத்துரைத்திருந்தது.

வடக்கிற்கு வரும் சர்வதேச பிரதிநிதிகள் வடக்கு முதலமைச்சரை சந்திக்கத் தவறுவதில்லை. தெற்கில் சிங்கள தலைவர்களை சந்தித்த பின்னர், வடக்கு வந்து அவர்கள் முதல்வரை சந்தித்து இங்குள்ள நிலமைகளை கேட்டறிந்து கொள்கின்றனர். தமிழ் ஈழ நிலம் எப்படி இருக்கிறது என்பதை வடக்கு முதல்வர் சர்வதேச பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்து வருகிறார். அதுவும் சிங்கள அரசுக்கு பாரிய நெருக்கடியாக உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களை பதவிகளை வழங்கி தன் பக்கம் இழுத்துக் கொண்டுள்ளது சிங்கள அரசு. சம்பந்தர், சுமந்திரன் என எல்லோரும் ரணிலின் செல்லப் பிள்ளைகள். ஆனால் அதே கூட்டமைப்பினால் ஆளப்படும் வடக்கு மாகாண சபையை மாத்திரம் ரணிலால் கட்டுப்படுத்த முடியவில்லை. புலிகள் அமைப்பில் இருந்து கருணாவைப் பிரித்ததது போல இப்போது தமிழ் தலைமைகளை உடைக்கும் சதியில் ரணில் ஈடுபட்டுள்ளார்.

இதன் ஒரு நடவடிக்கையே வடக்கு முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை. ஆனால் எமது மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். நீதியையும் உரிமையையும் பெறும் முதல்வருக்கு நெருக்கடி எழுந்தபோது வடக்கு பெரும் எழுச்சி பூண்டது. மக்கள் நீதியரசருக்கான தெருவுக்கு வந்தனர். நேற்றைய தினம் பல்லாயிரக் கணக்காகன மக்கள் நல்லூரிலிருந்து நீதியரசர் வீட்டுக்கு சென்று ஆதரவு வழங்கிய காட்சி கண்டு சம்பந்தர் குழு மிரண்டு போயுள்ளது.

வடக்கு முதல்வருக்கு ஆதரவான இந்த எழுச்சி, அவரை ஒருபோதும் அரசியல் அரங்கிலிருந்து அகற்ற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை மாத்திரம் உணர்த்தவில்லை. சிங்கள அரசின் கூட்டுச் சதிக்கு பலியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ் இன உரிமையை மறுக்கும் சிங்கள அரசுக்கும் இந்த எழுச்சி பல்வேறு செய்திகளை கூறி நிற்கிறது.

ஆசிரியர்.
செண்பகம்.
17.06.2017

Comments
Loading...