தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நெடுஞ்சாலை ஓரம் வழியாக இயற்கை எரிவாயு குழாயை பதித்துக்கொள்ளலாம்

மத்திய அரசின் கெயில் நிறுவனம் கேரளா, கர்நாடகா இடையே இயற்கை எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்திற்காக தமிழகத்தில் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கேட்கப்பட்டன. இதற்கு விவசாய சங்கங்கள், நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.keyil

இதனை அடுத்து தமிழக அரசின் தொழில் துறை முதன்மைச்செயலாளர் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி கெயில் நிறுவனத்துக்கு உத்தரவு ஒன்றை அனுப்பினார். அந்த உத்தரவில், ஏற்கனவே ஆர்ஜிதம் செய்யப்பட்ட விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், நெடுஞ்சாலை ஓரம் வழியாக கெயில் நிறுவனம், குழாய்களை பதித்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கெயில் நிறுவனத்தின் மூத்த மேலாளர் (சட்டம்) ஏ.வெங்கடேசன் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையின் போது கெயில் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இயற்கை எரிவாயு குழாயை விளைநிலங்கள் வழியாக எடுத்து செல்ல சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு கெயில் நிறுவனத்துக்கு ஆதரவாக அளித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக்கோரி தமிழக அரசின் சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜனவரி 17ஆம் திகதி தமிழகத்தில் கோவை, சேலம் உட்பட 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க கெயில் நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட்டு அளித்த அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. கெயில் நிறுவனம், தமிழக அரசின் மனுவின் மீதான பதில் மனுவை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 17ஆம் திகதி உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும் ஏற்கனவே இந்த விஷயத்தில் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் சில விவசாய சங்கங்கள் தொடர்ந்த வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றவும் அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எச்.எல்.தத்து மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேளாண் நிலங்களுக்கு இந்த திட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவுக்கு தமிழக அரசு சார்பில் பதில் மனு அளிக்க 3 வார காலம் அவகாசம் கோரப்பட்டது. ஆனால் இதற்கு கெயில் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 3 வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 3 வார காலத்துக்கு நீடிக்கப்பட்டு உள்ளது.

Comments
Loading...