Designed by Iniyas LTD
நெடுந்தீவில் ஒரே ஒரு அரச பஸ் மட்டும் போக்குவரத்தில்? ஸ்ரீதரன்
“வட மாகாணத்தில் சேவையில் ஈடுபடும், இலங்கைப் போக்குவரத்து சபையின் பஸ் சாரதிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர்களைப் புறக்கணிப்பதுடன், 7,000 மக்கள் வசிக்கும் நெடுந்தீவில் ஒரே ஒரு பஸ் மாத்திரம் சேவையில் ஈடுபடுவதால், அந்த மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்” என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று(04) இடம்பெற்ற, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “தனியார் மற்றும் இ.போ.ச பஸ் ஊழியர்களுக்கிடையில் காணப்படும் போட்டி மற்றும் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கம், வழித் தட அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் காணப்படும் மோசடிகள் என்பவை காரணமாக, இரு தரப்புக்கும் இடையில் சமரசம் இல்லாத நிலை காணப்படுகிறது.
இலங்கைப் போக்குவரத்துச் சேவை பஸ்களுக்கு இடையிலும் போட்டி காணப்படுவதுடன், தனியார் – இ.போ. ச பஸ்களுக்கு இடையிலும் போட்டி காணப்படுகிறது. வடமாகாணத்தில் உள்ள தீவான நெடுந்தீவில், ஒரே ஒரு பஸ் மாத்திரமே சேவையில் ஈடுபடுகிறது. அங்கு 7,000 மக்கள் வசித்து வரும் நிலையில் அவர்களது தேவையை நிறைவேற்ற, இந்த ஒரு பஸ் போதாது. நெடுந்தீவுக்கு செல்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் நெடுந்தாரகை மற்றும் வட தாரகை ஆகிய படகுச் சேவைகள் நடத்தப்படுகின்றன.
அதனுடாக அங்கு செல்லும் ஒருவர், நெடுந்தீவுக்குள் பயணிப்பதற்கு ஒரு பஸ் மாத்திரமே உள்ளது. இவ்வாறான நிலையால், அங்கு வசிக்கும் மக்கள், தாம் வேறு ஒரு தனி நாட்டில் வசித்து வருவதை போலவே உணர்கின்றனர். இவர்கள் இலங்கைக்குள் வசிக்கும் பிரஜைகளாக தம்மை உணர்வதற்கு அவர்களுக்கு குறைந்தது 3 பஸ் சேவைகளாவது நடத்த வேண்டும். மேலும், நெடுந்தீவில் சேவையில் ஈடுபடும் பஸ்ஸின் சாரதி, நடத்துநர் தாம் நினைத்த நேர அட்டவணையில் செயற்படுவதுடன், இலங்கை போக்குவரத்து சபையின் நியதிகளை கடைப்பிடிப்பதில்லை.
காலை 7 மணிக்கு இடம்பெறும் சேவையில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படுவதுடன், பாடசாலை செல்லும் மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதேவேளை, வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களிலும் இந்தப் பிரச்சினை காணப்படுகின்றது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். மேலும், அதி வேகமாக இவர்கள் பயணிப்பதன் காரணமாக அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன. ஏ-9 வீதியில் மிக மோசமான விபத்துகள் பதிவாகியுள்ளமைக்கு இந்த கவனயீனமான அதிக வேகமே காரணம். இவ்வாறான குறைபாடுகளை நீக்கி பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.