Designed by Iniyas LTD
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை – தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கு, கடம்பா குளத்திலிருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவது போன்ற காரணங்களால் ஆத்தூர் பாலத்திற்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் கடம்பன் குளம், பேப்பிலான் குளம், தண்டையார் குளங்கள் நிரம்பி நெடுங்குளம் கால்வாயில் அதிக அளவு நீர் சேர்ந்ததால் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. அப்பகுதியில் நெல், வாழை, வெங்காயம் போன்றவை நீரில் மூழ்கின.
கடையம் பகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் சிறு கிழங்கு பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுப் பன்றிகள் சிறு கிழங்கு செடிகளை நாசப்படுத்துவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது. பொன்னமராவதி, காரையூர், அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை, அறந்தாங்கி என புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
இலங்கை அருகே வங்கக் கடலில் நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 24 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.