Designed by Iniyas LTD
நெல் கொள்முதல் நிலையங்களைக் கூடுதலாகத் திறக்க வேண்டும் – விஜயகாந்த்
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைக் கூடுதலாகத் திறக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 
இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை. நெல் கொள்முதல் நிலையங்கள் வழக்கமான எண்ணிக்கையில் திறக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே திறக்கப்பட்டுள்ளன.
எனவே, நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொடுக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களைத் தேடிச் சென்று கொடுத்தாலும், ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகக் கூறி, நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், நெல் வியாபாரிகளிடமும், இடைத்தரகர்களிடமும் மிகக் குறைந்த விலைக்கு நெல் விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். கொள்முதல் விலையாக மோட்டா ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,460 என்றும், சன்னரக நெல்லுக்கு ரூ.1520 என்றும் நிர்ணயம் செய்துள்ளது. இந்த விலையை உயர்த்த வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.