Designed by Iniyas LTD
படுகொலைக்கு நீதி கோரி கிளர்ந்த வடக்கு!
ஸ்ரீலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களான சுலக்சன் மற்றும் கஜன் ஆகியோரின் படுகொலையை கண்டித்தும் நீதி கோரியும் கடந்த நாட்களில் வடக்கு கிளர்ந்தது. 25ஆம் திகதி செவ்வாய் கிழமை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியாக முழுமையான நிர்வாக முடக்கல் போராட்டம் இடம்பெற்றது. அனைத்து வர்த்தகர்களும் கடைகளைப் பூட்டி போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். அத்துடன் போக்குவரத்துக்களும் இடம்பெறவில்லை. தனியார் மற்றும் அரச பேருந்துகள் எவையும் போக்குவரத்தில் ஈடுபடவில்லை.
வடக்கு கிழக்கு மக்கள் எப்போதும் ஒன்று பட்டு தமது உணர்வை வெளிப்படுத்துபவர்கள். ஒன்றுபட்டு தமது போராட்டத்தை முன்னெடுப்பட்டவர்கள். சில தமிழ் கட்சிகள் நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு வடக்கு மாகாண மக்களுக்கே அழைப்பு விடுத்தன. வடகிழக்கு மாகாண மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தால் முழு வடகிழக்கும் ஸ்தம்பிதம் ஆகியிருக்கும். எனினும் திருகோணமலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாக மாணவர்களும் இப் படுகொலையை கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை கடந்த 24ஆம் திகதி, திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று திரண்டு வீதிக்கு வந்தனர். கொல்லப்பட்ட தமது சக மாணவர்களுக்காக நீதியை கோரித் திரண்ட மாணவர்களின் காட்சி பெரும் கவனத்தை ஈர்த்தது. யாழ் பல்கலைக்கழக வளாகத்திலும் யாழ் மாவட்ட அரச செயலகத்தின் முன்பாகவும் ஒன்று திரண்ட மாணவர்கள் கொல்லப்பட்ட மாணவனுக்கு நீதி வழங்காவிட்டால் தொடர்போராட்டங்கள் நடக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை மாணவர்கள் போராட்டத்தின் இறுதியில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிற்கு வழங்கிய மகஜருக்கு இன்று பதில் வழங்கப்பட்டுள்ளது. பதிலை ஸ்ரீலங்காவின் ஆதிக்க மொழியான சிங்களத்தில் வழங்கியுள்ளது சிங்கள ஆளுநர் தரப்பு. ஸ்ரீலங்காவில் தமிழையும் ஆட்சி மொழியாக கொண்டிருப்பதை நினைவுபடுத்திய யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்களத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது தமக்குத் தெரியாது என்பதை ஆங்கிலத்தில் கூறி கடிதத்தை அனுப்பிய ஆளுநர் அலுவலகத்திற்கே திருப்பி அனுப்பியுள்ளது.
மாணவர்கள் படுகொலை தொடர்பில் பல்வேறு மர்மங்கள் வெளிப்பட்டு வருகின்றன. மாணவன் சுலக்சன் சுட்டுக்கொல்லபட்டார் என்றும் மாணவன் கஜன் அதனைப் பார்த்த சாட்சி என்பதால் அடித்துக்கொல்லப்பட்டார் என்றும் சுலக்சனின் முன்பாக நின்ற பொலிஸார் அவர்களை மறிக்காது நேரே துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர் என்றும் தெரிய வந்துள்ளது. ஒரு கொலையை விபத்தாக மறைத்த பொலிஸாரின் குற்றம் தொடர்பிலும் பொலிஸாரின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் இப்போது வெளிப்படுகின்றன.
கிளிநொச்சியை சேர்ந்த மாணவன் கஜன் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவர். அத்துடன் விடுமுறை நாட்களில் கட்டட வேலைகளுக்கு கூலித் தொழிலாளியாகச் சென்றே தனது கல்வியையும் குடும்பத்தையும் கவனித்தவர். போரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நம்பிக்கையாக இருந்த அந்த மாணவனை சிங்களப் பொலிஸ் பரிதாபகரமாக மனித குலம் அஞ்சும் விதமாக அடித்துக் கொன்றுள்ளது. உண்மையில் மன்னிக்கவே முடியாத குற்றமும் அதிகாரத் துஸ்பிரயோகமும் இதுவாகும். இது சிங்கள மேலாதிக்க வெறியின் வெளிப்பாடு.
ஆனை செத்தாலும் ஆயிரம் பொன் என்பதைப் போல மாணவர்களை கொலை செய்த சிங்களக் காவல்துறையை காப்பாற்றவும் தமிழ் மக்கள் சிங்கள காவல்துறை வெட்டிக்கொள்கிறார்கள் என்ற கதையை பரப்பி இந்த சம்பவத்தை முற்றாக திசைதிருப்பி தமது இனவாத அறுவடையைப் பெற சிங்கள தேசத்தில் சில இனவாத சக்திகள் முயற்சிகளை மேற்கொள்ளுகின்றன. எனவே தமிழர் மண்ணில் சிங்கள இனவாத சக்திகள் தமது அரசியல் சூழ்ச்சிகளுக்கு இடமளிக்காத வகையில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதிகோரும் நடவடிக்கையில் சிங்களக் காவல்துறை சில குழப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றது. அத்துடன் அதனைப் பயன்படுத்தி சிங்கள இனவாத சக்திகள் தமது அரசியல் இலக்கை எட்ட முனைகின்றன. எனவே நீதியை பெறும் எமது போராட்டம் சவாலுக்குள்ளேயே இருக்கிறது. விழிப்போடும், அவதானத்தோடும், அறிவோடும் நிதானத்துடனும் நகர்வதன் ஊடாகவே கொல்லப்பட்ட மாணவர்களுக்கு நீதியைப் பெற இயலும்.
இதுவே எதிர்காலத்தில் சிங்களக் காவல்துறையின் அநீதி நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அமையும். விழிப்பே விடுதலையின் முதல்படி என்ற தேசிய தலைவரின் சிந்தனையின் அர்த்தத்தைப் புரிந்தபடி எம் இன வாழ்வை தொடருவோம்.
ஆசிரியர்,
செண்பகம்.
26.10.2016
