Designed by Iniyas LTD
பதவி விலகும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்: போராட்டக்காரர்கள்
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் தலைவர் காத்ரி ஆகியோர் தலைமையில் போராட்டம் வலுவடைந்ததால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வந்தது.
ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், நவாஸ் பதவி விலகும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் பிடிவாதமாக இருந்தனர். நேற்று இரவு நடைபெற்ற 5ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளுடன் போராட்டக்காரர்கள் தொடர்பை துண்டித்தனர்.
இதற்கிடையே லாகூர் மோதல் தொடர்பாக கோர்ட் உத்தரவுப்படி நவாஸ் ஷெரீப், அவரது சசோதரரும் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியுமான ஷாபாஸ் மற்றும் கேபினட் மந்திரி உள்பட 21 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காத்ரி வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் மந்திரி, போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால், பாகிஸ்தான் அரசு இறங்கி வந்தும், போராட்டக்காரர்கள் விடுவதாகவில்லை. பிரதமர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய அரசு ஒப்புக்கொண்டாலும், அவர் பதவி விலகுவதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கின்றனர்.
“ஷாபாஸ் ஷெரீப் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பதவி விலக முடிவு செய்யவில்லை. எனவே, எங்கள் எதிர்கால போராட்ட வியூகம் குறித்து விரைவில் அறிவிப்பேன்” என்று இம்ரான்கான் கூறுகிறார். இன்று புரட்சி தினம் என்று கூறிய காத்ரி, அரசுடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவு மூடப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டார்.
இந்த சூழ்நிலையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பிரதமரோ, பஞ்சாப் மாகாண முதல்வரோ பதவி விலகமாட்டார்கள் என்றும், நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகள் கலைக்கப்பட மாட்டாது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.