தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பயிற்சி ஆட்டத்தில் இந்திய “ஏ’ அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா, மணீஷ் பாண்டே சதம் அடித்து கை கொடுக்க, இந்திய “ஏ’ அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடருக்கு முன்னதாக இந்தியா “ஏ’ அணியுடன் வியாழக்கிழமை பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது. மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை ஃபீல்டிங்கைத் சேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு, தொடக்க வீரர்கள் உன்முக்த் சந்த், ரோகித் சர்மா இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்க, 10 ஓவர்களில் 72 ரன்கள் கிடைத்தது. 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் உன்முக்த் சந்த் 54 ரன்களில் வெளியேறினார்.

அதன்பின் கர்நாடகத்தைச் சேர்ந்த மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்தார் ரோகித். இருவரும் இணைந்து இலங்கை பந்து வீச்சாளர்களைத் திண்டாட வைத்தனர். குறிப்பாக ரோகித்தின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவர் அடித்த 18 பவுண்டரிகள் மட்டுமல்லாது, சில “கவர் டிரைவ்’கள் ரசிக்கும்படி இருந்தன. இந்த ஜோடி 214 ரன்கள் குவித்தது. இரண்டு மாத இடைவெளிக்குப் பின் ரோகித் சதம் அடிக்க, மணீஷ் பாண்டேவும் எதிர்முனையில் மூன்றிலக்கத்தைத் (சதம்) தொட்டார்.rohit-sharma

41-ஆவது ஓவரில் இரண்டாவது ரன் எடுக்க முயன்றபோது லஹிரு கமேஜின் துல்லிய “த்ரோ’வில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 111 பந்துகளில் 142 ரன்கள் விளாசினார். பின்னர் கேப்டன் மனோஜ் திவாரி, மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்தார்.

கடைசி ஓவரில் இந்திய ஏ அணி 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இருப்பினும், முன்னணி பேட்ஸ்மேன்கள் இலங்கை பந்துவீச்சை போதுமான அளவு பதம் பார்த்து விட்டதால், இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 382 ரன்களை எடுத்தது.

இமாலய இலக்கை “சேஸ்’ செய்ய வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, தொடக்க வீரர் உபுல் தாராங்கா மட்டுமே 76 ரன்கள் எடுத்தார். குசல் பெரேரா 4, தில்சன் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியாவுக்கு எதிரான கடைசி தொடரில் பங்கேற்றிருக்கும், மூத்த வீரர்களான ஜெயவர்தனே 33, சங்ககரா 34 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். கேப்டன் மேத்யூஸ் 3 ரன்களில் ஆட்டமிழக்க, மிடில் ஆர்டரில் பிரயஞ்சன் 23, டிக்வெலா 29 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

முடிவில் இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா “ஏ’ அணி வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் லெக் ஸ்பின்னர் கரண் சர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Comments
Loading...