Designed by Iniyas LTD
பறவை காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் 1200 அதிரடி நடவடிக்கை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் மொல்கிரா கிராமத்தில் ஏற்பட்ட பறவை காய்ச்சலை தொடர்ந்து, தமிழகத்தில் அந்நோய் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 
இதன்பேரில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர், துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மூலம் அண்டை மாநிலங்களை ஒட்டியுள்ள 10 மாவட்டங்களில் 38 சோதனை சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படத்தக்கவாறு அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள் மற்றும் கோழி தீவனங்கள் ஏற்றிவரும் வாகனங்கள் சோதனை சாவடிகளிலேயே தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது.
சோதனை சாவடிகளில் அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. தேவையான மருந்து தெளிப்பான்கள் மற்றும் கிருமி நாசினிகள் அனைத்து சோதனை சாவடிகளிலும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1,200 அதிரடி நடவடிக்கை குழு ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சார்பு துறைகளான பொது சுகாதாரம், நகராட்சி நிர்வாகம், தெற்கு ரெயில்வே, வனத்துறை, ஊரக வளர்ச்சி, வணிக வரித்துறை, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, கோழி வளர்ப்போர் சங்கம் ஆகிய துறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கோரப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மேற்படி துறைகளுடன் சேர்ந்து பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறவைகள் சரணாலயத்தில் கண்காணிப்பு செய்து வருகின்றனர். கோழி பண்ணைகள் நிறைந்த இடத்தில் தினசரி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்பு இயக்குனர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.