தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பறிக்கப்பட்ட  கிரீடம் மீண்டும் இலங்கை   அழகு ராணியிடம் ஒப்படைப்பு!!

பறிக்கப்பட்ட  கிரீடம் மீண்டும் இலங்கை   அழகு ராணியிடம் ஒப்படைப்பு!!

 

இலங்கை என்ற பட்டத்திற்கான இறுதிப் போட்டி நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற போது அழகு ராணியாக தெரிவான புஸ்பிகா டி சில்வா கிரீடம் பறிக்கப்பட்டது.

எனினும், தற்பொழுது அந்த கிரீடம் அவரிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருமதி இலங்கை நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

திருமணமாகி விவாகரத்தான ஓர் பெண்ணுக்கு இந்த பட்டத்தை வழங்க முடியாது என கரோலின் ஜூரி, புஸ்பிகாவிற்கு வழங்கப்பட்ட கீரிடத்தை மீளப் பெற்று இரண்டாம் இடம் பெற்றவருக்கு வழங்கியிருந்தார்.

எனினும், புஸ்பிகா விவகாரத்தானவர் என்பதனை நிரூபிப்பதற்கு எவ்வித எழுத்து மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், இதனால் அவருக்கே இந்த பட்டத்தை மீள வழங்க தீர்மானித்ததாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்விற்கு பாரிய அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவின் பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் புஸ்பிகா டி சில்வா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.தாம் விவகாரத்து பெற்றுக்கொள்ளவில்லை எனவும், மேடையில் வைத்து அணிவிக்கப்பட்ட கிரீடம் அகற்றப்பட்டதனால் தமக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக புஸ்பிகா தெரிவித்துள்ளார்.

இந்த அவமானத்திற்கான நட்டஈடு கோருவது குறித்து தாம் சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரீடம் அணிவிக்கப்பட்டு பின்னர் அதனை அகற்றிய சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வரும் நிலையில் புஸ்பிகாவிற்கு மீளவும் கிரீடத்தை வழங்கியதாக ஏற்பாட்டுக் குழு பணிப்பாளர் தினேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

இலங்கையில் திருமணமான அழகு ராணி தெரிவிற்கான இறுதிப் போட்டி நேற்று மாலை நெளும் பொகுன அரங்கில் நடைபெற்றுள்ளது.

இதன்போது போட்டியாளரான திருமதி புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெற்றியாளருக்கு ஷிராந்தி ராஜபக்ஷ, ரோஸி சேனாநாயக்க மற்றும் சந்திமல் ஜெயசிங்க ஆகியோர் கிரீடத்தை சூட்டியுள்ளனர்.

இருப்பினும் ஒரு சில நிமிடங்களில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெற்றவர் எனவும், எனவே அவர் இந்த போட்டியின் வெற்றியாளராவதற்கு தகுதியற்றவர் எனவும் திருமணமான உலக அழகியான கரோலின் ஜுரி மேடையில் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து ஏற்கனவே இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டவர் திருமணமான அழகு ராணியாக அறிவிக்கப்பட்டதுடன், புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கிரீடம் அகற்றப்பட்டு குறித்த பெண்ணுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நிகழ்வு முடியும் வேளையில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Comments
Loading...