Designed by Iniyas LTD
பழனி சன்முகாநதியில் 6 அடி நீள முதலையால் பக்தர்கள் பீதி!
பழனியை அடுத்த கோதைமங்கலம் அருகே பெரியாவுடையார் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே சண்முகநதி ஓடுகிறது. இந்த நதியில் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நதியில் குளிப்பது வழக்கம். மேலும் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் நதியில் குளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் கோவில் ஊழியர்கள் நதியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது நதியின் கரையில் சுமார் 6 அடி நீள முதலை படுத்துக் கிடந்தது. இதைப்பார்த்ததும் கோவில் ஊழியர்கள், மற்றும் அங்கு குளிக்க வந்திருந்த பக்தர்கள் பீதி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் வனஅலுவலர் துரை தலைமையில் வனத்துறையினரும், தீயணைப்பு நிலைய அதிகாரி மயில்ராஜ் தலைமையில் வீரர்களும் விரைந்து வந்தனர். மேலும் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி முதலைப்பண்ணையில் இருந்தும் 6 பேர் பழனிக்கு விரைந்து வந்தனர்.
இந்த முதலையை பிடிக்க 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பெரிய வலையுடன் முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சண்முகநதியில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சண்முகநதியில் 6 அடி நீள முதலை கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.