Designed by Iniyas LTD
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் நியூஸிலாந்து 101 ஓட்டங்களால் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிராக மவுன்ட் மௌங்கானு, பே ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 101 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் நியூஸிலாந்து முன்னிலை வகிக்கின்றது. அத்துடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான 60 புள்ளிகளையும் நியூஸிலாந்து பெற்றுக்கொண்டது.
373 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு போட்டியின் கடைசி நாளான நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் கடுமையாகப் போராடி சகல விக்கெட்களையும் இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றது.
பவாத் அலாம் 102 ஓட்டங்களையும் அணித் தலைவர் மொஹம்மத் ரிஸ்வான் 60 ஓட்டங்களையும் பெற்றதுடன் ஐந்தாவது விக்கெட்டில் 165 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு உற்சாகமூட்டினர். ஆனால் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தமை பாகிஸ்தான் அணிக்கு பேரிடியைக் கொடுத்தது.
இப் போட்டியில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 431 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களையும் பெற்ற போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 239 ஓட்டங்களைப் பெற்றது.தனது 76 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஒட்டுமொத்தத்தில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 3-வது நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
இந்த போட்டியின் நாயகனாக அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸன் தெரிவானார். இரு அணிகளும் மோதும் கடடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி இரண்டாம் திகதி கிறிஸ்ச்சேர்ச்சில் இடம்பெறும்.