Designed by Iniyas LTD
பாமக உதவியை நாடும் எடப்பாடி பழனிச்சாமி!
முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற நாளிலிருந்து அவருக்கு அதிகமான நெருக்கடிகளை கொடுத்து வருவது கொங்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள், இன்னாள் அமைச்சர்கள்தான்.
கடந்த சில நாட்களுக்கு முன் பழனியப்பன் மற்றும் செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தங்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதிலும் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலத்தை கூட கட்டுப்படுத்தி விடலாம். ஆனால், முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான பழனியப்பனை சமாளிக்க முடியாமல் எடப்பாடி திணறி வருகின்றார்.
அதிமுகவில் 30 எம்.எல்.ஏக்கள் பழனியப்பன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அவர்கள் அனைவரையும் தனது வீட்டிற்கு வரவழைத்து முக்கியமான ஆலோசனை கூட்டம் நடத்தி முடித்துள்ளார்.
அந்த கூட்டத்திற்கு வந்த இரண்டு பேர் அனைத்து செலவுகளையும் கவனித்துக்கொள்கிறோம். நீங்கள் முதலமைச்சர் பதவியில் அமருவதற்கு முயற்சி மேற்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
சசிகலாவின் நெருக்கமானவர் என்பதால் அவரது வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஆட்சிக்கு எந்த ஒரு பங்கமும் வந்துவிடக்கூடாது என்று சற்று அமைதியாக இருந்து வருகிறாராம் பழனியப்பன்.
இதனை கேள்விப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி மிகவும் கோபத்துடன் இருக்கின்றாராம். பழனியப்பனால் தமது முதலமைச்சர் பதவிக்கு எதாவது ஆபத்து வந்துவிடும் என்று அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதை எப்படி தடுக்கலாம் என்று யோசித்த எடப்பாடி, தற்போது உள்ள சூழலில் அமைச்சர்களோ அல்லது எம்.எல்.ஏக்களாலோ பழனியப்பனை கட்டுப்படுத்த முடியாது என்று உணர்ந்துள்ளார். இதனால் அவரை பாமகவை வைத்து அடக்கி வைக்க முடிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த தேர்தலின்போது பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பல கிராமங்களில் பழனியப்பனை ஊருக்குள் விடாமல் ஓட ஓட துரத்தி அடித்தனர் பாமகவினர்.
மேலும், தேர்தல் முடிவு வெளியான அன்று கூட கடைசி நேரத்தில் 13 ஆயிரம் வாக்குகள் வரை பின்தங்கியே பழனியப்பன் இருந்தார். கடைசி அரை மணி நேரத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தற்போது கவனத்தில் எடுத்துக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள பாமக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களை வைத்து பழனியப்பனுக்கு நெருக்கடி அளிக்க திட்டமிட்டுள்ளார்.
பாமகவுக்கு மட்டுமே அஞ்சு நடுங்குவார் பழனியப்பன். இதனால் அவர்களை வைத்து விரட்டி அடிக்க முடிவு செய்து, தர்மபுரியில் உள்ள பாமக பிரமுகர்களிடம் எடப்பாடி அணியை சேர்ந்தவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு பழனியப்பனை விரட்டி அடிப்பது எங்களுக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை. இதற்கு மேலிடத்தில் பேசி முடிவு செய்யுங்கள். அப்போது அங்கிருந்து உத்தரவு வந்தபின்பு நாங்கள் அனைத்தையும் பார்த்து கொள்கிறோம் என்று உள்ளூர் பாமக பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த பழனியப்பன் சற்று அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், பாமக தலைமையிடம் இருந்து உத்தரவு வந்தால் பழனியப்பன் பாடு அதோ கதிதான் என்கின்றனர் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த அதிமுகவினர்.
எடப்பாடி கில்லாடி தான் போல.. என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.