Designed by Iniyas LTD
பிப்ரவரியிலேயே தமிழகத்தை வாட்டி வதைக்கின்றது வெயில்
தமிழகத்தில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதத்தில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. எனவே இந்த ஆண்டு வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
ஆனால் தற்போது பிப்ரவரி மாதத்திலேயே வெயில் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் குறித்து இப்போதே பொது மக்கள் கவலை அடைந்து உள்ளனர். இந்த மாதம் முழுவதும் தமிழகத்தில் சராசரியாக 90 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியிருக்கிறது. இதே போல் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலத்திலும் வழக்கத்தைவிட வெயில் அதிகரித்து இருக்கிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இளநீர், மோர், தர்பூசணி உள்ளிட்டவைகளை சாப்பிட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதனால் சாலையோரங்களில் இப்போதே இளநீர், தர்பூசணி கடைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில், ”கோடை காலம் மார்ச் 1ஆம் தேதி முதல் ஆரம்பமாகும். ஆனால் பிப்ரவரி மாதத்திலேயே வெப்பம் அதிகரித்துள்ளது. காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால் வழக்கத்தை விட 1.5 டிகிரி வெப்பம் அதிகரித்து இருக்கிறது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெப்பம் அதிகம் தான். செவ்வாயன்று அதிகபட்சமாக சேலத்தில் 97 டிகிரி பதிவானது” என்றார்.