தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிப்-2ஆம் தேதி கோவை வருகிறார் பிரதமர் மோடி

narendramodinew--621x414பிரதமர் மோடி நாளை மறுநாள்(2ந் தேதி) கோவை வருகிறார். சிங்காநல்லூர் வரதராஜ புரத்தில் ரூ.650 கோடியில் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மற்றும் புறநோயாளிகள் பிரிவு, 24 மணி நேர சேவை மையம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

பிரதமரின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் (எஸ்.பி.ஜி.) ஐ.ஜி.யஷ்வந்த்குமார் ஜெத்வா தலைமையில் 10 அதிகாரிகள் கோவை வந்துள்ளனர். நேற்று மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட் நாயக், கமிஷனர் அமல்ராஜ், மேற்கு மண்டல ஐ.ஜி.ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். பிரதமர் வருகையின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

பிரதமர் மோடி கோவையில் பயணம் செய்வதற்காக மூன்று குண்டு துளைக்காத கார்கள் கோவை வந்துள்ளன. அந்த கார்கள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விழா நடைபெறும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, பொதுக் கூட்டம் நடைபெறும் மைதானம் ஆகியவை போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி பேசும் பொதுக்கூட்ட மைதானத்தில் வெடிகுண்டு தடுப்பு படையினர் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். 2ந் தேதி பொதுக்கூட்ட மேடைக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.

பாதுகாப்பு பணிக்காக திருப்பூர், சேலம், ஈரோடு, நீலகிரி மற்றும் திருச்சி, மதுரை, நெல்லை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 போலீஸ் ஐ.ஜி.க்கள் தலைமையில் 2 டி.ஐ.ஜி.கள் மேற்பார்வையில் 23 பிரிவுகளாக போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. 35 போலீஸ் சூப்பிரண்டு 50 உதவி கமிஷனர்கள் மற்றும் டி.எஸ்.பி.க்கள், 3 ஆயிரம் சட்டம் ஒழுங்கு போலீசார், 1500 ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியன் போலீசார் 1000 பேர், ஊர்க் காவல்படையினர் 200 என 6 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வெளிமாவட்ட போலீசார் நேற்று முதலே கோவைக்கு வரத் தொடங்கி விட்டனர். அவர்கள் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் தங்கி உள்ளனர். இன்று முதல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Comments
Loading...