Designed by Iniyas LTD
பிரபாகரன் தனியான கொடியோ தேசிய கீதமோ கோரவில்லை: ராஜித சேனாரத்தின
அரசியல் பிரச்சினைக்கான தீர்வு சமஷ்டியா அல்லது ஐக்கிய இலங்கையா என்று யாப்பு திருத்தம் தொடர்பான ஆராய்வு முடிவின்போது தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார். நாட்டை துண்டாடாது தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையை சகல தரப்பினதும் திருத்தங்களுடன் நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்தின அரசியல் யாப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைக்கு ஆயுதம் மூலம் தீர்வு காண முன்னர் முயற்சிக்கப்பட்டது என்று தெரிவித்த அவர் தற்போது நாகரிகத்துடன் நாட்டை துண்டாடாது தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். அதிகாரங்களை ஐக்கிய, பெடரல் என வரையறுக்க முடியாது என்று தெரிவித்த அவர் மகாகாணசபையை கூட பெடரல் என்றே வரைறுப்பதாகவும் குறிப்பிட்டார். ஆச்சே உருவாக்கப்பட்டபோது தனியான கொடி, தனியான கீதம், தனியான பாராளுமன்றம் கோரப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் பிரபாகரன் தனியான தேசிய கீதத்தையோ தனியான கொடியையோ கோரவில்லை என்றும் குறிப்பிட்டார். ஜி.எல். பீரிஸ் இன்று பெடரலுக்கு எதிராக குற்றம் சாட்டி பேசி வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் அவர் கேட்டபடி அமைச்சுப் பதவி வழங்கியிருந்தால் பெடரலுக்கு சார்பாக பேசுவார் என்றும் முன்னைய காலத்தில் சிறுபான்மை இனத்திற்காக குரல் கொடுத்த சமசமாஜக் கட்சி இன்று பெடரலை எதிர்ப்பாக கூறுகிறது என்றும் அக் கட்சி சர்வ கட்சி அறிக்கையில் வடகிழக்கை இணைக்க முடியும் என்று தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.