Designed by Iniyas LTD
பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!
02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ் அரசியல் துறை பொறுப்பாளார் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் 1௦ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கிளிநொச்சியில் அரசியல்துறை அலுவலகம் மீது சிறீலங்கா அரச விமானப்படையின் குண்டு வீச்சின் போது அவர் வீரச்சாவடைந்தார்.
லெப். கேணல் அன்புமணி மேஜர் மிகுந்தன் மேஜர் கலையரசன் லெப். ஆட்சிவேல் லெப். மாவைக்குமரன் மேஜர் செல்வம் ஆகியோரும் இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்தனர்.
சு.ப. தமிழ்செல்வன் தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் போராட்ட களத்திலும் அரசியல் தளத்திலும் பணி செய்தவர். நாற்பது வயதை எட்டிய சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டார். இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்கும் வரையான பதினான்கு ஆண்டுகளாகத் தனது பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.
அவர் யாழ். மாவட்டத் தளபதியாக பணியாற்றிய அக்காலப் பகுதியில் வட போர்முனையின் கட்டளைப்பீடமாகத் திகழும் பலாலி முக்கூட்டுப் படைத்தளத்தின் அச்சுறுத்தலிலிருந்து போராட்டத்தின் மையத்தளமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தை பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்புச் சமருக்கு முகங்கொடுத்த அதேவேளை இவரது தலைமையில் பல வலிந்த தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டன.
1993ஆம் ஆண்டு தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளராக தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டார். இவர் அரசியல் பணியாற்றிய காலம் மிகுந்த நெருக்கடி மிக்கதாகும். ஒரு மிகப் பெரும் போர் இடப்பெயர்வு நெருக்கடிக்கும், இயற்கை அழிவுகளுக்கும் முகம் கொடுத்த மக்களின் புனர்வாழ்வு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்ற வாழ்வியல் நெருக்கடிகளையும் வெற்றிகரமாகக் இவர் கையாண்டார்.
இதேவேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவரது இராஜதந்திரப் பணி வித்தியாசமானதாகும்.
இராஜதந்திர வலைப் பொறிக்குள் வீழ்த்திவிட முயலும் அனைத்துலக இராஜதந்திர முயற்சிகளுக்கு ஈடு கொடுத்து இலட்சியத்தையும், தலைமையின் முடிவுகளையும் பாதுகாக்கின்ற இராஜதந்திரப் பாத்திரத்தை பிரிகேடியர் ஏற்றிருந்தார்.
அனைத்துலக சமூகத்தின் இராஜதந்திர சிக்கல்களுக்குள்ளோ, அனைத்துலக ஊடகங்களின் சிக்கலுக்குள்ளோ அகப்படாது அவர் நேர்த்தியாக முன்கொண்டு சென்றிருந்தார். இதில் நோர்வே அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட அமைதியில் எட்டாவது கட்ட ஜெனீவா பேச்சுவார்த்தை பிரிகேடியர் தலைமையேற்று முன்னெடுத்திருந்த மிகச் சிறந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஒன்றாகும்.
தனது இருபத்து மூன்று வருடகால விடுதலைப் பயணத்தில் பதின்மூன்றாண்டு காலம் தொடர்ச்சியாக படைத்துறைப் பணியையும் பதினான்காண்டு காலம் அரசியல் தளத்தில் இராஜதந்திரப் பணி, மக்கள் பணியென விடுதலை அமைப்பின் வளர்ச்சிக்கும், மக்களின் மேம்பாட்டுக்குமென அயராது உழைத்த விடுதலை இயக்கத்தின் செயற்பாட்டாளராகத் திகழ்ந்தார்.
அவரின் இறுதிக் காலப்பகுதியானது அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், படைத்துறை ரீதியாகவும் அவர் புடம் போடப்பட்ட ஒரு இளம் தலைவராக, உருவாகியிருந்தார்.
