Designed by Iniyas LTD
பிரிட்டனின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்கு வாய்ப்பு!
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு நடந்தது. அதில் ஆதரவளித்து 52 சதவீதம் பேர் மெஜாரிட்டியாக வாக்களித்தனர். அதை தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகிவிட்டது.
ஆனால் விலக கூடாது என பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தீவிரமாக இருந்தார். அதற்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஓட்டு பதிவின் போது கூட மக்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் விலகுவது என மெஜாரிட்டி மக்கள் வாக்களித்தனர்.
இதனால் விரக்தி அடைந்த அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். வருகிற அக்டோபர் மாதத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே இப்போட்டியில் பலர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இருந்தாலும் போரிஸ் ஜான்சனுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஐரோப்பிய யூனியனில் நீடிப்பது குறித்த பொது ஓட்டெடுப்புக்கு பிரதமர் கேமரூன் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்.
ஐரோப்பிய யூனியனில் நீடிப்பதை கேமரூன் ஆதரிக்கும்பட்சத்தில் பொது வாக்கெடுப்பில் தோற்று விட்டால் அவர் பதவி விலக நேரிடும். அதையடுத்து அடுத்த பிரதமர் பதவிக்கு போரிஸ் ஜான்சன் குறி வைத்து இருந்தார். அதற்காக காய் நகர்த்தி வந்தார்.
அவர் எதிர்பார்த்தது போலவே நடந்து விட்டதால் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அவருக்கு பிரகாசமாக உள்ளது. இவர் லண்டன் நகர முன்னாள் மேயர் ஆக பதவி வகித்தவர்.
பிரிட்டனின் 200 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மிக இளம் பிரதமர் என்ற பெருமையை டேவிட் கேமரூன் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றார். ஸ்காட்லாந்து பிரிவினை பிரச்சினையில் சாதுரியமாக செயல்பட்டு வெற்றி பெற்றார். ஆனால் ஐரோப்பிய யூனியன் விவகாரத்தில் பின்னடைவை சந்தித்து பதவி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.