தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதிய ஆட்சியிலும் தொடரும் பௌத்த சிங்கள மயமாக்கல்!

efcb4122-96e2-4430-8d9a-418442865fff

ஈழத் தமிழ் மக்களை அடக்கி, ஒடுக்கி, அழிக்க அவர்களின் தாயக பூமியான வடகிழக்கை பௌத்த சிங்களமயமாக்கும் நடவடிக்கைகளை ஸ்ரீலங்காவை ஆட்சி புரியும் அரசுகள் தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்றன. ஸ்ரீலங்காவில், சுதந்திரத்திற்குப் பிந்தைய அறுபதாண்டுகளில் பல்வேறு கட்சிகள் ஆட்சி புரிந்துள்ளபோதும் அவர்கள் பல்வேறு நடைமுறைகளையும் திட்டங்களையும் மாற்றியுள்ளபோதும் தமிழ் ஈழரின் தாயகத்தில் பௌத்த, சிங்கள மயமாக்கல் என்ற திட்டத்தை மாற்றியதில்லை.

எந்தவொரு இனத்திற்கும் அதனது தாய் நிலமும் பண்பாட்டு அடையாளங்களும் மிகவும் முக்கியமானவை. அவைகளை கொண்டிராத இனம் ஒன்று சிதைவை நோக்கிச் செல்ல நேரிடும். ஒரு இனத்தை அழிப்பவர்கள் முதலில் அந்த இனத்தின் பண்பாட்டு மையங்கள்மீதும் அதன் அடையாளங்கள்மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். அவற்றை அழித்து துடைக்கின்றனர். கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா அரசு உக்கிரமான போர்களின்போது அதனை மிக செம்மையாக செய்து தாம் எப்படியான ஒரு அழிப்பு அரசு என்பதை நிரூபித்திருக்கிறது.

போரின்போது தமிழர்களின் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த மையங்கள்மீது குண்டுகளைக் கொட்டியுள்ளன. ஆலயங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள் எல்லாம் புலிகள் உள்ளே இருக்கிறார்கள் என்று கூறி அப்பாவி சனங்கள்மீது குண்டுகளைப் போட்டு இன அழிப்பையும் பண்பாட்டு, அடையாள அழிப்பையும் ஒரே நேரத்தில் செய்து முடித்திருக்கிறது. அது மாத்திரமின்றி போரில் கைப்பற்றும் தமிழ் ஈழ பகுதிகளில் உள்ள பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை அழித்து அதன் அடையாளங்களை சிதைத்திருக்கிறது.

இவ்வாறு தமிழ் ஈழ மண்ணில் அழிப்பு வேலைகளை செய்யும் இராணுவம் அங்கு தமது அடையாளங்களான சிங்கள பௌத்த மயமாக்கலை நிறுவுகின்றன. சிங்கள இராணுவம் பௌத்த விகாரைகளை அமைக்கவும் புத்தர் சிலைகளை அமைக்கவுமா தமிழர் மண்ணை அபகரித்தது? சிங்கள இராணுவம் தமிழ் ஈழ நிலத்தை சிங்கள பௌத்த அடையாளத்திற்கு உள்ளாக்கவா தமிழர் நிலத்தை அழித்தது? பேரினவாத இன மத வெறியை விரிவுபடுத்துவதான் சிங்கள இராணுவத்தின் நோக்கமா?

கடந்த சில மாதங்களுக்குள் மாத்திரம் முல்லைத்தீவில் பத்துக்கு மேற்பட்ட புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் யுத்தம் முடிந்த பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் நாற்பது இடங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மாங்குளத்தில் பாரிய விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளன. மிகவும் பரந்து விரிந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்கிரமித்துள்ள ஸ்ரீலங்கா இராணுவம் அங்கு பௌத்த சிங்கள மயமாக்கலை மிகவும் சுதந்திரமாக விரிவுபடுத்துகிறது.

கொக்கிளாய் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றில் பௌத்த விகாரை ஒன்றை சிங்களப் பிக்கு ஒருவர் அமைத்து வருகிறார். சிங்களவளுக்கு தொடர்பில்லாத அப் பகுதியில் ஏன் பௌத்த விகாரை? என்று அப் பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் தனியார் ஒருவருக்கு விகாரை அமைக்கப்படும் காணி சொந்தமானது. காணி உரிமையாளர் காணியை வழங்குமாறு கேட்கிறார். ஆனால் அவரை தென்னிலங்கை அரசியல்வாதிகளின் உதவியுடன் மிரட்டி வருகிறார் அந்த பௌத்த பிக்கு.

இதனைக் குறித்து நேரில் ஆராய்ந்து பதில் அளிப்பதாக வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தார். அண்மையில் அப் பகுதியால் சென்ற அவர் பௌத்த விகாரை அமைக்கப்படும் இடத்தை கடந்து சென்றபோதும் அதனை இறங்கிக்கூட பார்க்கவில்லை. அதாவது அந்த பௌத்த விகாரையை தமிழ் மண்ணில் அமைக்க வடக்கு மாகாண ஆளுநர் அனுமதியளிக்கிறார். இதைப்போலவே நயினாதீவிலும் பாரிய புத்தர் சிலைகளை அமைத்தே தீருவோம் என்று சிங்களவர்கள் அடம் பிடிக்கின்றனர்.

பௌத்த சிங்கள மயமாக்கலை புதிய அரசும் மிகவும் நுட்மாக மேற்கொண்டு வருகிறது. நல்லாட்சி அரசு என்றும் தமிழ் ஈழர்களுடன் நல்லிணக்கம் செய்கிறோம் என்றும் சொல்லிக்கொண்டு தமிழ் ஈழர்களின் நிலத்தில் பௌத்த நிங்கள மயமாக்கல் நன்கு திட்டமிட்ட ரீதியில் சுதந்திரமாக முன்னெடுக்கப்படுகிறது. தமிழ் ஈழ நகரங்களின், தமிழ் ஈழ நிலங்களின் அடையாளங்களாக பளத்த விகாரைகளும் புத்தர்சிலைகளும் கட்டி எழுப்பபடுகின்றன.

தமிழர்களுக்குரிய ஆட்சித் தீர்வையும் வழங்குவதை தடுப்பதுடன் அவர்களின் தாயகத்தை அழித்து தம்மை அங்கு நிலைநிறுத்தி ஆக்கிரமிப்புச் செயலை செய்வதற்கு தமிழ் ஈழ மண்ணை அடையாள அழிப்புச் செய்யும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா அரசு மிக முனைப்பாகச் செயற்பட்டுவருகிறது. தமிழர்களாகிய நாம் இதனைத் தடுத்து நிறுத்தி எமது இருப்பை பாதுகாக்க வேண்டியது காலத்தின் அவசியமான தேவையாகும்.

ஆசிரியர், செண்பகம். 18.04.2016

Comments
Loading...