Designed by Iniyas LTD
புதிய சுங்கக் கட்டளைச் சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி
புதிய சுங்கக் கட்டளைச் சட்டத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போர்க்கொடி பிடித்துள்ளன. நிதி அமைச்சரின் தேவைக்காக வரையப்பட்டுள்ள உத்தேச சுங்கக் கட்டளைச் சட்டத்தை சமர்ப்பித்தால் சுங்கப் பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க நேரிடும் என தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
தற்பொழுது அமுலில் இருக்கும் சுங்கக் கட்டளைச் சட்டம் வரி வருமானத்தை அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது என தொழிற்சங்க அழைப்பாளர் எம்.ஆர்.ரீ. விஜேகோன் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் இதுவரையில் 50 தடவைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேவை ஏற்பட்டால் 51ம் தடவையாகவும் திருத்தம் செய்யப்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில் எனினும் முற்றிலும் புதிய சட்டமொன்று அவசியமில்லை.இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய சுங்கக் கட்டளை சட்டத்தை உருவாக்கும் பணிகளை நிதி அமைச்சர் ஆரம்பித்தார். இந்த புதிய சட்டத்தை வரையும் பொறுப்பும் சுங்கத்துறையுடன் தொடர்புபடாத மூன்று பேரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதற்காக அவர்களுக்கு 90 லட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. புதிய உத்தேச சட்டத்தில் நிதி அமைச்சருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன், சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் அதிகாரங்கள் வரையறைக்கு உட்படுத்தப்படும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளின் சுங்கச் சட்டங்களின் விடயங்கள் புதிய உத்தேச சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எனவே இவ்வாறான ஓர் சட்டத்தை அமுல்படுத்த இடமளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.