Designed by Iniyas LTD
புதுச்சேரியில் 9 மாதங்களுக்கு பிறகு அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் திறப்பு!: கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாடம் கற்கும் மாணவர்கள்..!!
புதுச்சேரி!: புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. 7 மாதங்களுக்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் 9,10,11 12 ஆகிய 4 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து, பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று முதல் (ஜன.4) புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளும் நடத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்தது.
அதன்படி இன்று காலை முதலே அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களும் வருகை தருகின்றனர். மாணவர்களை வரவேற்கும் விதமாக பள்ளி முன்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நுழைவு வாயில் முன்பு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக முகக்கவசம் அணிந்தே மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். புதுச்சேரியில் 9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வருகின்ற 17ம் தேதி வரை விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பெற்றோரின் அனுமதியோடு பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரை வகுப்புகள் நடத்தப்படவிருக்கிறது. 18ம் தேதியிலிருந்து அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அன்று முதல் மாணவர்களுக்கு முழு நேர வகுப்பு நடைபெறும். கொரோனா விதிமுறைகளை எப்படி பின்பற்றுவது என்பது தொடர்பாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.