தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் மாவீரர் நிகழ்வு

தமிழீழத்தை மீட்கப் போராடி உயிர்நீத்த எம் புலி மாவீரர்களுக்கு வீர வணக்க நிகழ்வு புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கப்டன் மில்லர் அரங்கில் 27.11.2014 அன்று மாலை 6.05 மணிக்கு நடத்தப்பட்டது.puthuchchery

முன்னதாக அரியாங்குப்பத்திலுள்ள தந்தை பெரியார் சிலையருகே இருந்து புலவர். புலமைப்பித்தன் அவர்கள் தீபச்சுடர் ஏந்தி ஊர்வலமாக வர, அவரைப் பின்தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மற்றும் பெண்கள், குழந்தைகள் எனப் பொதுமக்களும் பெருந்திரளாக ”கப்டன் மில்லர் அரங்கம்” வந்தடைந்தனர். அரங்கில் தீபச் சுடர் ஏற்றப்பட்டபொழுது மாவீரர் வீரவணக்கப் பாடல் இசைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து “தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள்-2014 அறிக்கை” ஒலிபெருக்கியில் ஒலிக்கப்பட்டது. அனைவரும் மிகுந்த கவனத்துடனும் ஆர்வத்துடனும் அறிக்கையைக் கேட்டபின்பு மாவீரர்களுக்கு மலர்த் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர். லோகு.அய்யப்பன் அவர்களின் வீரவணக்க அறிமுக உரையைத் தொடர்ந்து புலவர். புலமைப்பித்தன் அவர்கள் வீரவணக்க உரையாற்றினார். அப்போது தான் தம்பியுடன் (தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரனோடு) பழகிய காலத்தையும், தான் எவ்வாறெல்லாம் தலைவருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே ஈழ விடுதலைக்காக உழைத்தார் என்பதையும் விளக்கினார். தொடர்ந்து பேசிய அவர் புலி வீரர்களின் தியாகங்களையும் இந்தியா ஈழத்திற்குச் செய்த துரோகத்தையும் ”இந்தியா தமிழர்களின் எதிரி நாடு” என்பதையும் பதிவு செய்தார்.

தந்தை பெரியாரின் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையையும் தம்பின் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் விளங்கப்படுத்தினார். ”எங்கோ ஒரு நாட்டில் பதுங்கியிருக்கும் தம்பி வெளியே வருவார், மீண்டும் ,ஈழத்தில் 5-ஆம் கட்டப் போர் நடக்கும், தமிழீழம் மலரும்” என்றார். ”அதன் பின்னரே தான் கண்களை மூடுவேன் அதுவரை உயிரோடு இருப்பேன்” எனப் பேசியபோது அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முந்நூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு இந்த மாவீரர் நாள் நிகழ்வைச் சிறப்பித்தனர்.

Comments
Loading...