தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புத்துணர்வு பெற்றது கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம்

யுத்தத்தின் போது பாரிய சேதத்திற்குள்ளான மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில், இன்று (திங்கட்கிழமை) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

வாகரை, கதிரவெளி, கண்டலடி, புளியங்கண்டலடி, பால்சேனை உள்ளிட்ட கிராம அபிவிருத்தி சங்கத்தினர் இணைந்து, பிரதேச மக்களின் உதவியுடன் இச் சிரமதானப் பணிகளை முன்னெடுத்தனர்.

கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லறைகள் அனைத்தும் யுத்தம் முடிவடைந்த பின்னர் பாதுகாப்பு படையினரால் அழிக்கப்பட்டு, தென்னை மரங்கள் நடப்பட்டன. எனினும், உரிய பராமரிப்பின்றி காணப்பட்டதால் பின்னர் அப்பகுதி பற்றைக் காடாக மாறியது.

இந்நிலையில், இன்றைய தினம் வாகரை, கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்குரிய ஜே.சி.பி கனரக வாகனம் மற்றும் உழவு இயந்திரங்களை கொண்டு ஆண்கள் பெண்கள் என அனைவரும் இணைந்து குறித்த இடத்தை சுத்தப்படுத்தினர்.

இதன்போது, சிதறிக் கிடந்த சுமார் 50க்கு மேற்பட்ட கல்லறைகள் சேகரிக்கப்பட்டு உரிய இடத்தில் நிரையாக நட்டுவைக்கப்பட்டன.

இச் சிரமதானப் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர் எஸ்.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Comments
Loading...