Designed by Iniyas LTD
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு?
நெடுங்கேணி – குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஸரிபன் (36 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை புளியங்குளம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, திடீரென மயக்கம் ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த இவர், புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய பதிவு
இதன்பின்னர் சமூகத்துடன் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென மயக்கமடைந்த பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த முன்னாள் போராளியின் சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த முன்னாள் போராளியின் இறுதிக்கிரியைகள் குளவிசுட்டானில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று யாழ்ப்பாணம் – நீர்வேலியில் உள்ள இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா அரசிடம் புனர்வாழ்வு பெற்ற பல முன்னாள் போராளிகள் மர்மமாக உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
