Designed by Iniyas LTD
புலம்பெயர் தமிழ் மக்கள் பாதுகாப்பை சீர்குலைத்து, குழப்பத்தை ஏற்படுத்த முனைகின்றனர் – உதய பெரேரா
புலம்பெயர் தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை சீர்குலைத்து, குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாக யாழ். பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட 11 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்களிடமே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்ட வெளிநாட்டுத் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் நேற்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டனர்.
பின்னர் இடம்பெற்ற சந்திப்பின்போதே வெளிநாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களிடம் அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா உட்பட அவுஸ்ரேலியா, கானா, சாம்பியா, நெதர்லாந்து உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.
மேலும், சிவில் செயற்பாடுகளில் இராணுவம் எவ்வித தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர்களிடம் தெரிவித்திருக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 118 குடும்பங்கள் மட்டுமே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளன என்றும் அவர்களில் அதிகமானோர் தற்போது வசிக்கும் இடங்களிலேயே நிரந்தரமாக குடியிருக்கத் தயார். அதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.