Designed by Iniyas LTD
புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கு ஸ்ரீலங்கா குடியுரிமை வழங்கப்படாதாம்!
இரட்டை குடியுரிமை அனுமதி வழங்குவது எந்த வகையிலும் நாட்டுக்கு பாதிப்பு இல்லை. புலம்பெயர் புலி நபர்களுக்கு எந்த வகையிலும் குடியுரிமை வழங்கப்படாது என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் தமிழ் பிரஜைகளுக்கு தடைகளின்றி பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டது.
இரட்டை குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தெரிவுசெய்யப்பட்ட 2ஆயிரத்து 500 பேருக்கு இம்முறை இரட்டை குடியுரிமை சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் வினவியபோதே அமைச்சரவை இணை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இரட்டை குடியுரிமை வழங்கும் திட்டம் இப்போது உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. கடந்த காலத்தில் இருந்து இந்த முறைமை கையாளப்படுகின்றது. முன்னைய அரசாங்கத்தில் கூட தமக்கு வேண்டப்பட்ட பலருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்களுக்கு கூட இவ்வாறு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால் எமது அரசாங்கத்தில் அவ்வாறு வேண்டப்பட்டவர்களுக்கு என்ற சிறப்பு சலுகைகள் எவையும் இல்லை. நாம் இலங்கையில் அரசியலமைப்பு விதிமுறைக்கு அமைய இந்த பொறிமுறைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
கடந்த ஆண்டு இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இலங்கையில் வசிப்பவருக்கு மட்டும் அல்லாது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் விண்ணப்பிக்க கோரப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதிக் காலகட்டம் வரையில் 20ஆயிரத்துக்கும் அதிகமானோர் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் 4ஆயிரத்து 500பேருக்கு இந்த சான்றிதழ் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
அதேபோல் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாகவே இப்போதும் இரட்டை குடியுரிமை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இம்முறையும் 20ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் தெரிவுசெய்யப்பட்ட 2ஆயிரத்து 500 பேருக்கு இம்முறை இரட்டை குடியுரிமை சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு ஜனாதிபதி பிரதமர் தலைமையில் நடைபெறும் என இப்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- இரட்டை பிரஜாவுரிமை விண்ணப்பத்தில் புலம்பெயர் இலங்கையர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றதா?
பதில்: தனிப்பட்ட எவருக்கும் என்ற விசேட சலுகைகள் எவையும் வழங்கப்படாது. ஆனால் தகுதியானவர்கள் அனைவரும் இதில் விண்ணப்பிக்க முடியும். வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர். அதில் தமிழர்களும் பலர் உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. ஆகவே அதில் தடைகள் எவையும் இல்லை. பெரும்பாலும் வியாபார நோக்கத்தில் செயற்படும் நபர்கள் இந்த இரட்டை குடியுரிமையை கையாள்வதால் அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
கேள்வி:- சர்வதேச தரப்பில் செயற்படும் புலம்பெயர் அமைப்புகளும் புலிகளின் உறுப்பினர்களும் இந்த நடவடிக்கையை சாதகமாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக ஒருசில கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதில் அரசாங்கம் எவ்வாறு செயற்படுகின்றது?
பதில்:- இந்த குற்றசாட்டு முட்டாள்தனமானது. இலங்கையில் செயற்பட அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில் விண்ணப்பிப்பவர்கள் யார் என்ற முழுமையான தகவல்களை அரசாங்கம் ஆராயும். பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் இதில் விண்ணப்பித்துள்ள நிலையில் குறிப்பிட்ட சிலருக்கே இந்த சலுகைகளை வழங்க தீர்மானித்துள்ளோம். எனவே இதில் நாம் அதிக அக்கறையுடன் செயற்படுகிறோம். இரட்டை குடியுரிமை வழங்குவது எந்த வகையிலும் நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை. என அவர் தெரிவித்துள்ளார்
சர்வதேசத்துக்கு நல்லிணக்கம் எனக்கூறி மறைமுகமாக தனது இனவாதத்தை ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒரு விதத்தில் தற்போதைய அரசு வெளிப்படுத்திவருகிறது. அரசியல் கைதிகள் விடயத்திலும் சரி காணாமல் போனோரின் விசாரணை எனும் நாடகத்திலும் சரி மறைமுகமான இனவாதத்தை மைத்திரி அரசு வெளிப்படுத்துகிறதென்பது குறிப்பிடத்தக்கது.