Designed by Iniyas LTD
புலம்பெயர் மக்களின் கருத்துக்கள் தேவையில்லையாம்!
நீண்டகால இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு மீள் உருவாக்கம் மூலமாகவே நிரந்தரத்தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. ஆனால், வென்றெடுத்த ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் எந்த முயற்சிகளை எடுக்கவும் நாம் தயாராக இல்லை என ஸ்ரீலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பு திருத்த யோசனையில் நாட்டு மக்களின் கருத்துகளை பெற்று அதற்கமைய மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். ஆனால், புலம்பெயர் அமைப்புகளின் கருத்துகளுக்கோ அல்லது தடைசெய்யப்பட்ட தனி நபர் எவரது கருத்துக்களுக்கும் இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்து வரும் நிலையில் இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் போது புலம்பெயர்ந்தோரின் கருத்துக்களை பெறவேண்டும் என அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தை அறியும் நிபுணர்குழு தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இப்போதைய நிலையில் நாட்டில் பல்வேறு மாற்றங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொதுமக்களின் காணிகளை விடுவித்துள்ளோம், வடக்கில் இராணுவ குறைப்பினை மேற்கொண்டுள்ளோம். எனினும் இந்த மாற்றங்களை விடவும் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக அமையும். அதாவது நீண்டகால இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ் மக்கள் குரலெழுப்பி வருகின்றனர். கடந்த காலத்தில் அரசாங்கம் இனப்பிரச்சினை தொடர்பில் ஸ்திரமான நிலைப்பாட்டை எட்டவில்லை. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த போதிலும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
எனினும் ஆட்சிமாற்றம் இன்று நாட்டு மக்களுக்கு நல்லதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையர் எனற உணர்வு இன்று மக்கள் மத்தியில் பலமாக ஏற்பட்டுள்ளது. தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் நல்ல ஒற்றுமை உள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் நாட்டில் தேசிய ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் அரசியல் அமைப்பு திருத்தம் ஒன்றை உருவாக்குவது சாதகமாக அமையும்.
எனினும் இந்த அரசியல் அமைப்பு திருத்தம் எந்த வகையிலும் நாட்டை பிளவுபடுத்தாத வகையிலும், மீண்டுமொரு குழப்பம் ஏற்படுத்தாத ரீயிதிலும் இருக்கவேண்டும். குறிப்பாக பெளத்த சிங்கள கொள்கைக்கு முரணாகாத வகையிலும் அமைய வேண்டும் என்பதில் அரசாங்கம் தெளிவாக உள்ளது. வென்றெடுத்த ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் எந்த முயற்சிகளை எடுக்கவும் நாம் தயாராக இல்லை.
யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் தொடர்பிலும் அவர்களை மீள் வருகை குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால் சர்வதேச ரீதியில் இன்றும் பலமாக செயற்பட்டுவரும் விடுதலைப்புலிகள் அமைப்புகளும் இந்த பட்டியலில் உள்ளமையினால் அவர்கள் தொடர்பில் கூடிய கவனத்துடன் செயற்படவேண்டிய தேவையும் உள்ளது. அதேபோல் அரசியலமைப்பு திருத்த யோசனையில் நாட்டு மக்களின் கருத்துகளை பெற்று அதற்கமைய மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். ஆனால் புலம்பெயர் அமைப்புகளின் கருத்துகளுக்கோ அல்லது தடைசெய்யப்பட்ட தனிநபர்கள் எவரது கருத்துக்களுக்குமோ முன்னுரிமை கொடுக்கப்படாது. இலங்கைக்கான ஒரு அரசியலமைப்பு திருத்தத்தில் பிரிவினைக்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்போவதில்லை. அதேபோல் புலம்பெயர் அமைப்புகளின் கருத்துக்களும் இடமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.