Designed by Iniyas LTD
புலிக்கு பயத்தில் மரத்தில் தொங்கிய சுற்றுலா பயணி!
நேபாள காடொன்றுக்குச் சென்ற நெதர்லாந்து சுற்றுலாப் பயணியொருவர், அங்கு தன்னைத் தாக்க வந்த புலியிடமிருந்து தப்ப இரு மணித்தியால நேரமாக மரமொன்றில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பொறியிலாளரான ஜெரால்ட் வான் லார் (33 வயது) என்ற மேற்படி நபர், நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டியுடன் பார்டியா தேசிய பூங்கா வனப் பிராந்தியத்துக்கு சுற்றுலா சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புலியைக் கண்ட வழிகாட்டி அங்கிருந்து தப்பியோட அவரைத் துரத்திச்சென்ற புலி அவரைக் காயப்படுத்தியுள்ளது. எனினும் அவர் அங்கிருந்து ஒருவாறு தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஜெரால்ட் மரமொன்றில் ஏறியுள்ளார்.
வழிகாட்டி தப்பிச்சென்றதால் சினமடைந்த புலி மீண்டும் ஜெரால்ட்டைத் தேடி வந்துள்ளது.
ஜெரால்ட் மரத்தில் ஏறித் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த புலி அந்த மரத்தை சுற்றி ஆவேசத்துடன் வலம் வந்துள்ளது. அவர் தரையிலிருந்து சுமார் 6 மீற்றர்கள் உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்துள்ளார்.
இதனையடுத்து தப்பிச்சென்ற வழிகாட்டி வன உத்தியோகத்தர்கள் சகிதம் சம்பவ இடத்துக்கு வந்ததையடுத்து, அந்த உத்தியோகத்தர்களால் புலி அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஜெரால்ட் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
பார்டியா தேசிய பூங்காவில் சுமார் 70 புலிகள் உள்ள போதும் அவை பார்வையாளர்களை தாக்குவது அரிதாக இடம்பெறும் சம்பவமாக கருதப்படுகிறது.