Designed by Iniyas LTD
புழக்கத்திற்கு வரும் முன்பே ரூ. 7.20 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: தஞ்சையில் பரபரப்பு
தஞ்சாவூரில் இரு வேறு இடங்களில் புதன்கிழமை இரவு தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ. 8.23 கோடி சிக்கியது.
தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பணப் பட்டுவாடாவைத் தடுப்பதற்காகத் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர், விடியோ கண்காணிப்புக் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மேலவஸ்தா சாவடி பகுதியில் புதன்கிழமை இரவு நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ரூ. 7.20 கோடி மதிப்பில் புதிய ரூ. 2,000 நோட்டுகளும், ரூ. 65,000 மதிப்புள்ள பழைய ரூ. 100 நோட்டுகளும் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரிலிலிருந்து தஞ்சாவூர் கிளைக்குக் கொண்டு செல்வது தெரிய வந்தது. ஆனால், அதற்கான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வண்டியின் பதிவு எண், கொண்டு வரப்பட்ட வேனின் பதிவு எண்ணோடு வித்தியாசப்பட்டது.
இதனால், அப்பணத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல, மாரியம்மன் கோயில் புறவழிச்சாலையில் புதன்கிழமை இரவு மற்றொரு நிலையான கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் அந்த வழியாக வந்த காரில் ரூ. 38.50 லட்சம் மதிப்புள்ள பழைய ரூ. 500 ரூபாய்கள் இருந்தன. சிதம்பரத்திலிருந்து தஞ்சாவூர் வழியாக திருச்சி கிளைக்குச் சென்று கொண்டிருந்த இந்த பணமும் தேசியமாக்கப்பட்ட வங்கிக்கு உரியது. ஆனால், அதற்கான ஆவணத்தில் வண்டி எண் இல்லை. எனவே, இந்தப் பணத்தையும் பறிமுதல் செய்த குழுவினர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின்னர் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.