தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பூர்வீகமாக நாங்கள் வாழ்ந்த நிலத்தினை அரசாங்க நிலமாக பிரகடனப்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் -குமள முனை மக்கள்

முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள குமளமுனை கிராமத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்களை கபடத்தனமாக அரச நிலங்களாக பிரகடனப்படுத்துவதற்கு பிரதேச செயலர் மற்றும் மாவட்டக் காணி உத்தியோகஸ்தர் ஆகியோர் முயற்சிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குமுளமுனை கிழக்கு கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள தாமரைக்கேணி, வன்னியன்மேடு ஆகிய கிராமங்களில் மக்கள் மிக நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர்.மேலும் இந்தப் பகுதியில் உள்ள மக்கள் தங்களுடைய நிலங்களில் மக்கள் பயன்தரு மரங்களை நாட்டி அவற்றிலிருந்து தங்களுடைய வாழ்வாதார பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.ITHTHAVIL-1

இதேபோன்று இந்தப் பகுதி மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதார தொழிலாக சிறு விவசாயத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த 21ம், 22ம் திகதிகளில் மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு காணிக் கச்சேரி நடத்தப்பட்டுள்ளது. இதன்போதே மக்களுடைய நிலங்களை அரசாங்க நிலமாக பிரகடனப்படுத்தப் போவதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த காணிக் கச்சேரிக்கு மக்கள் அழைக்கப்பட்டபோது, போரினால் அழிக்கப்பட்ட நில ஆவணங்களை வழங்குவதற்கான காணிக் கச்சேரி என கூறப்பட்டுள்ளது. பின்னர் மேற்கண்டவாறு அரசாங்க நிலமாக பிரகடனப்படுத்தப் போவதாக பிரதேச செயலர் கூறியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

மேலும் விடயம் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கையில், 2009ம் ஆண்டு போரினால் இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் செல்லும் வரையில் எங்களிடம் எங்களுடைய நிலத்திற்கான ஆவணங்கள் இருந்தன. ஆனால் போரின் கொடுமையினால் எங்கள் உயிர்களை மட்டுமே பாதுகாக்க முடிந்தது. ஆவணங்களை பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் நாங்கள் போரின் போது தொலைத்த ஆவணங்களை மீளவும் வழங்குவதற்காகவே கணிக் கச்சேரி நடத்தப்படுவதாகவும், எனவே அதில் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் எங்களிடம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் கேட்கப்பட்டது.

நாம் அங்கே சென்றிருந்தபோது, எமக்கு 2 ஏக்கருக்கு மட்மே ஆவணங்களை வழங்க முடியும் எனவும், மீதமாகவுள்ள காணிகளுக்கு ஆவணங்களை வழங்க முடியாது எனவும் அதிகாரிகள் கூறியதுடன், ஒரு குடும்பத்திற்கு ஆக கூடுதலாக 2 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்க முடியும்.

மீதமாகவுள்ள காணிகளை திருமணமான பிள்ளைகளின் பெயரில் பதிவு செய்யவேண்டும் எனவும், கூறினார்கள். பின்னர் நாங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்றபோது, அவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். திருமணமான பிள்ளைகள் இல்லாதவர்களிடம் பதிவுகள் பெறப்படாத நிலையில் பதிவுகள் செய்யப்பட்டு நிலத்திற்கான ஆவணங்களை பெறாத மக்களுடைய நிலங்களை அரசாங்க நிலமாக பிரகடனப்படுத்தப் போவதாக பிரதேச செயலக அதிகாரிகள் எங்களுக்கு கூறியுள்ளார்கள்.

இதனால் பெறுமதியான பல தென்னந்தோட்டங்கள் மற்றும் பயன்தரு மரங்கள் கொண்ட பெறுமதி யான நிலம் முழுவதும் அரசாங்க நிலமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. ஆனால் அந்த நிலத்தையே நாங்கள் நம்பியிருக்கின்றோம். அந்த நிலம் இல்லவிட்டால் நாங்கள் பட்டினி கிடக்கும் நிலையே உரு வாகும் என மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

மேலும் பிரதேச செயலகம் மற்றும் காணி அலுவலரின் இந்நடவடிக்கை நில ஆக்கிரமிப்பிற்கான மற்றொரு உபாயம் என மக்கள் குற்றம்சாட்டியிருப்பதுடன், பூர்வீகமாக நாங்கள் வாழ்ந்த நிலத்தினை அரசாங்க நிலமாக பிரகடனப்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம். எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் எனவும் கூறியிருக்கின்றனர்.

Comments
Loading...